மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பல கோடி முறைகேடு

* முன்னாள் துணைவேந்தர் மீது பேராசிரியர்கள் குற்றச்சாட்டு

* உதவி பேராசிரியர்களுக்கு பல லட்சம் வங்கிக்கடன்

* கமிஷன் அமைத்து ஐகோர்ட் கண்காணிக்க கோரிக்கை

சிறப்பு செய்தி

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டினர். எனவே, இது குறித்து உண்மை நிலை வெளியே தெரிய விசாரணை கமிஷன் அமைத்து ஐகோர்ட்டே நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாக பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வங்கிக்கிளையில் இருந்து கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பணியில் சேர்ந்து சில மாதங்களுக்குள், சில லட்ச ரூபாய் வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது. பணியில் சேர்ந்த சில மாதங்களுக்குள் ஒருவருக்கு வங்கிக்கடன் வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. இந்த முறைகேடு தொடர்பாக பேராசிரியர்கள் கூறியதாவது: துணைவேந்தர் பதவி என்பது கல்வித்துறையில் மிகவும் பலம் படைத்த பதவி. துணைவேந்தராக வரும் ஒரு நபர், பதவியில் இருக்கும் 3 ஆண்டுகளும், அளித்த பணத்தை விட கூடுதல் பணம் சம்பாதிக்கவே நினைக்கிறார்கள். இதற்காக பணி நியமனம் உள்பட பல்வேறு வழிகளில் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் 2016ம் ஆண்டு உதவி பேராசிரியர்களை நியமனம் செய்துள்ளார்.

ஆனால் அவ்வாறு நியமனம் செய்த உதவி பேராசிரியர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை. ஒரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு செய்யும்போது, மாநில நாளிதழ்கள், தேசிய நாளிதழ்களில் அது தொடர்பாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில நாளிதழ்களில் மட்டுமே பேராசிரியர் நியமனம் தொடர்பாக விளம்பரம் வெளியானது. அதுமட்டுமல்லாது, ஒரு உதவி பேராசிரியர் பணிக்கு 160 பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்க சில நாட்கள் ஆகும். ஆனால் ஒரே நாளில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு சிலர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையாக நடைபெறவில்லை. குறைந்தபட்சம் 15 பேர், தலா 40 லட்சம் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தபோது, லஞ்சம் வழங்கியதாக ஒருவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தனர். குற்றத்தை நிரூபிக்க போலீசாருக்கு ஆதாரங்கள், சாட்சி சொல்ல ஆள் வேண்டும். பணம் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள், குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவர்கள் பணி பறிபோய்விடும், சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். அதனால் இந்த குற்றத்தை நிரூபிக்க வாய்ப்பே இல்லை. இதனால் இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எந்தவித குற்றஉணர்வும் இன்றி தைரியமாக வலம் வருகிறார்கள். முறைகேடாக பணிக்கு சேர்ந்த உதவி பேராசிரியரை வைத்து தன் பெயருக்கு களங்கம் விளைக்க முயற்சிப்பதாக கூறி, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்த பேராசிரியர் மீது ₹1 கோடி கேட்டு, கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறையில் ேபராசிரியர்கள் அளித்துள்ள புகாரின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு பேராசிரியர்கள் கூறினர். முறைகேட்டில் தொடர்புடையவர்கள் எந்த வித குற்ற உணர்வும் இன்றி தைரியமாக வலம் வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: