மதுரையில் அடகுக்கடையை உடைத்து 1,500 பவுன் கொள்ளையடித்தது வெளிமாநில முகமூடி கும்பல்

* விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

* 4 தனிப்படை அமைத்து தேடுதல்வேட்டை

மதுரை: மதுரையில் அடகுக்கடையை உடைத்து 1,500 பவுன் நகை கொள்ளையில் ஈடுபட்டது வெளிமாநில முகமூடி கும்பல் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதுரை, நரிமேடு, மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (45).  கட்டபொம்மன் நகரில் தனலட்சுமி நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இக்கடையில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு புகுந்த முகமூடி கும்பல், அங்கிருந்த 1,500 பவுன் நகைகள், ரூ.9 லட்சத்தை  கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட 4 தனிப்படையினர் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஒரே குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி மீனா, நிதி, மற்றொரு நிதி, தனலட்சுமி என 4 பங்குதார்கள் தனித்தனியாக நகை அடகுக்கடை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் மொத்த நகைகளையும் தனலட்சுமி நகை அடகுக்கடையில் உள்ள பீரோ லாக்கரில் வைப்பது வழக்கம். ஒரே பீரோவில் 20 லாக்கர்கள் உள்ளன. இந்த 20 லாக்கர்களையும் உடைத்து, அறுத்து கொள்ளை அடித்துள்ளனர். கடையில் பணியாற்றும் ஊழியர்களான சென்னகேசவன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட சிலரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம். கடை கேட் மற்றும் தலைவாசல் கேட் பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளன.  கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஒரு கார், 2 வேன்களை கொண்டு வந்து கடையை மறைத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு சந்தேகம் வராத அளவிற்கு கேஸ் வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.

தமிழகத்தில் வேலூர், கோவை போன்ற 5 இடங்களில் கேஸ் மூலம் வெல்டிங் வைத்து லாக்கர்களை உடைத்து வெளிமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இங்கும் அதே பாணியில் கொள்ளை நடந்திருப்பதால் வெளிமாநில முகமூடி கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. கேஸ் வெல்டிங் ராடு மதுரையில் தான் தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே, மதுரையில் தங்கி, திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்,’’ என்றார். மதுரையில் உள்ள கேஸ் வெல்டிங் கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அடகு வைத்தவர்கள் குவிந்தனர்

கொள்ளை நடந்த அடகு கடை வழக்கம்போல் நேற்று திறக்கப்பட்டது. நகைகள் கொள்ளை போன சம்பவம் அறிந்து, அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள், 2வது நாளாக நேற்றும் கடையின் முன்பு குவிந்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் கடை உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, திருடுபோன நகைகள் மீட்டுக் கொடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: