×

திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள்: பிற தோழமை கட்சிகளுடன் ஓரிரு நாளில் ஒப்பந்தம் என மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகம், புதுச்சேரியையும் சேர்த்து 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில், மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சென்னையில் கையெழுத்திட்டு, அறிவித்தனர். பாஜ கூட்டணிக்கு எதிராக தேசிய அளவில் மதச்சார்பற்ற கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய பாஜ அரசை அகற்ற கோரி திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கட்சி தலைவர்கள் அறிவித்தனர். மெகா கூட்டணியாக உருவானதால் இந்த கூட்டணியை உடைக்க மத்திய, மாநில உளவுத்துறை தீவிரமாக முயன்று வந்தன. ஆனால் கூட்டணியை அவர்களால் உடைக்க முடியவில்லை. இந்தநிலையில், தேர்தல் நெருங்குவதால் கூட்டணி தொடர்பான தொகுதி பங்கீடுகளை விரைவாக முடித்து தேர்தல் பணிகளில் முழுவீச்சாக களம் இறங்க திட்டமிட்டுள்ளனர்.

இதனால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முதலில் காங்கிரசிடம் இருந்து திமுக தலைமை தொடங்கியது. கடந்த சில நாட்களாக திமுக, காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தங்களுக்கான சீட் விபரங்களை தொகுதியுடன் பட்டியலாக தயாரித்து மேலிட மூத்த தலைவரான அகமது படேலிடம் ஒப்படைத்தனர். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பட்டியலை கொடுத்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, திமுக தரப்பில் டெல்லி சென்ற கனிமொழி எம்பி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரசுக்கு ஒதுக்கிய சீட் எண்ணிக்கை குறித்து தெரிவித்தார். இந்தப் பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி கூட்டணி அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று மாலை சென்னை வந்தனர்.

பின்னர் தனியார் ஓட்டலுக்கு சென்ற அவர்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இரவு 8.05 மணி அளவில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். காங்கிரஸ் சார்பில், மேலிட மூத்த தலைவர்கள் முகுல்வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். திமுக தரப்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, நடைபெற்ற தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் புதுச்சேரியும் அடங்கும். இதற்கான ஒப்பந்தத்தில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைவராக இருக்கக்கூடிய நான், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இன்று(20ம்தேதி) நாடாளுமன்ற தொகுதி செயல்பாடுகள் குறித்து கலந்து பேசியதில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை பங்கீட்டு கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர்(தமிழக பொறுப்பு) முகுல்வாஸ்னிக், தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமியும், திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவராக இருக்கக்கூடிய நானும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரியும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஓரிரு நாளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா, கொங்கு மக்கள் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஆகியோருடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஓரிரு நாளில் அவர்களுடனும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,DMK ,Puducherry Congress ,Tamil Nadu ,MK Stalin , DMK Alliance, Tamil Nadu, Puducherry, MK Stalin
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு