குடிநீர் வினியோகம் பாதிப்பின்றி முக்கடல் அணை சுரங்கப்பாதை குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம்

நாகர்கோவில்: முக்கடல் அணை சுரங்கப்பாதை குழாயில் உண்டான உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாகர்கோவில் நகராட்சி பகுதிகளுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம், கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பின்னர் வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முக்கடல் அணையின் அடிப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் பதிக்கப்பட்டு உள்ள 400 எம்.எம். கொண்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் முக்கடல் அணையின் அடிமடை பகுதியில் இருந்து தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது மடை அடைக்கப்பட்டு சுரங்கப்பாதையில் உண்டான குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இன்று 4வது நாளாக பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் நகராட்சி இன்ஜினியர் பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து, மாற்று குழாய் பதிக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த குழாய் உடைப்பால் தண்ணீர் வினியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. அடிமடை பகுதியில் தான் தண்ணீர் திறப்பு இருக்காது என்றும் ஊழியர்கள் கூறினர். முக்கடல் அணை தண்ணீரை நம்பி தான் நகர  பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம் இருக்கிறது. இன்னும் மாநகராட்சியாக மாற்றப்பட்டு உள்ளதால், தண்ணீர் தேவைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் மாற்று திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: