கேரளாவில் தனியார் ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து: கரும்புகை சூழ்ந்துள்ளதால் தீயை அணைப்பதில் சிரமம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ரப்பர் தொழிற்சாலை குடோன் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. எர்ணாகுளம் தெற்கு ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள தொழிற்சாலை கிடங்கில் இருந்து இன்று பிற்பகலில் திடீரென புகை வெளியேறியது. உடனடியாக சுதாரித்த சிலர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், தீ கட்டிடம் முழுவதும் பரவி எரிய தொடங்கியது. 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக உருவான கரும்புகை அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் சூழ்ந்து வருகிறது. இதையடுத்து பக்கத்து கட்டிடங்களில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் முயற்சியிலும், உள்ளே சிக்கியவர்களை மீட்கும் முயற்சியிலும் தீயணைப்புத் துறை தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் கரும் புகை அதிகமாக சூழ்ந்து காணப்படுவதால், தீயை கட்டுப்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்படையிடம் உதவி கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ரப்பர் காலணிகளை கொண்ட குடோன் என்பதால் புகை அதிகமாக பரவுவதாக கூறப்படுகிறது. முதலில் இந்த குடோனின் 4வது தளத்தில் தீ பிடித்ததாகவும், அதன்பிறகு மற்ற தளங்களுக்கு பரவியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகாமையில் மெட்ரோ வேலை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்து தகவல்கள் வெளிவரவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: