×

அயோத்தி வழக்கு விசாரணை பிப்., 26ம் தேதி தொடங்கப்படும் : உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி : அயோத்தி வழக்கு விசாரணை பிப்., 26ம் தேதி தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்  1992ம் ஆண்டு பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இந்த பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை எழுந்தது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சரிசமமாக பங்கிட்டுக் கொள்ளுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் 14 மனுக்கள் தாக்கல் செய்தனர். மேலும் இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இம்மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜனவரி 8ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி ரமணா, யுயு லலித், சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு அயோத்தி வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பாபர் மசூதி தொடர்பான வழக்கில் ஏற்கனவே வழக்கறிஞராக இருந்ததால் இந்த அமர்வில் இருந்து விலகுவதாக கடந்த ஜன., 10ம் தேதி நீதிபதி யுயு லலித் கூறினார். இதனால் அயோத்தி வழக்கு ஜனவரி 29ம் தேதி விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. பின்னர் நீதிபதி யுயு லலிதின் கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கு விசாரணை அமர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர், எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசத் ஆகியோர் கொண்ட அமர்வினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு பிப்ரவரி 26ம் தேதி அயோத்தி வழக்கை விசாரணைக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த வாரம் செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அயோத்தி வழக்கு தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayodhya ,case trial ,Supreme Court , Ayodhya case, Supreme Court, Babur mosque demolition, Chief Justice Ranjan Kokai
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்