×

கோடநாடு வழக்கு: மனோஜ், சயானை பிப்.25ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மனோஜ், சயானை வரும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரின் ஜாமினை உதகை நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்திருந்த நிலையில், இவர்களின் மேல்முறையீட்டு மனு மீது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இரவு, காவலாளியை கொன்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மனோஜ், சயான் உள்பட 11 பேர் மீது கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனோஜ் மற்றும் சயானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, நீலகிரி மாவட்ட நீதிமன்றம், 2017 டிசம்பரில் உத்தரவிட்டது. இந்நிலையில், கோடநாடு கொள்ளை சம்பவத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி, மனோஜ், சயான் ஆகியோர் அளித்த பேட்டி அடங்கிய வீடியோவை, புலனாய்வு பத்திரிகை நிருபர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீலகிரி மாவட்ட நீதிமன்றம், மனோஜ் மற்றும் சயானுக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்து பிப்ரவரி 8ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் சயான் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி இளந்திரையன், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்பட்ட மனோஜ், சயான் ஆகியோரை பிப்ரவரி 25ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என கோத்தகிரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் கோத்தகிரி காவல் நிலையத்தினர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை பிப்ரவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj ,arrest ,Cyan , Kodadadu Case, Siyan, Manoj, Arrest, Ban, High Court
× RELATED பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு...