×

பட்டாசு வழக்கு..... பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பட்டாசு வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இவை மூலம் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம், ‘பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தக்கூடாது. சரவெடி தயாரிக்க கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும்’ உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தது.

இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி, கடந்த நவ. 13ம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி, உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். முன்னதாக, பட்டாசு வழக்கு கடந்த ஜன. 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அவசர வழக்காக விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனால் ஆலைகளை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே, சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி, உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர், விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். மேலும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும், கஞ்சி தொட்டி திறப்பு, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தினர்.

சிவகாசியில் டிஆர்ஓ உரிமம் பெற்ற 150க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று முன்தினம் முதல் இயங்கத் தொடங்கின. பட்டாசு வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க கோரியும், இடைக்கால தீர்ப்பு வழங்கக்கோரியும், தமிழக அரசு பலமுறை மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், டெல்லி உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டாசு தொழில் முடக்கத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருவதாக தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், பசுமை பட்டாசு தயாரிப்பதை ஒப்புக்கொண்டதாக முதலில் கூறினீர்கள். பிறகு அது சிரமமானதாக இருக்கிறது என கூறுகிறீகள். எத்தனையோ புதிய தொழில்நுட்பம் வந்து விட்டது. பசுமை பட்டாசை எளிமையாக தயாரிக்க வழி காண வேண்டியது தானே. பட்டாசு வெடிக்க வேண்டும் அதே சமயம், அது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வண்ணமும் இருக்க வேண்டும். டெல்லியை விட காற்றின் தரம் மோசமாக உள்ள நகரங்கள் நாட்டில் உள்ளது எனத் தெரிவித்தனர். பின்னர் பட்டாசு வழக்கில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பசுமைபட்டாசு, மாசுக்குறைந்த பட்டாசு தயாரிப்பது குறித்து பிப்.26-ம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Central Government , Fireworks case, federal government, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...