×

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை : 2018-19ம் கல்வியாண்டில் இருந்து 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது. கடந்த மாதம் இந்த அறிவிப்பு வெளியாக நிலையில், இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, மேல்நிலை, மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றிறிக்கையில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலர்கள் கொண்டு குழு அமைத்து தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வானது 60 மதிப்பெண்களுக்கு 2 மணி என்ற நேரம் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும், தனியார், சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.50, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுதேர்வு எழுத உள்ள மாணவர்களை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : examination ,classes ,Tamil Nadu , Tamilnadu, Public Examination, School Education, Central Government
× RELATED இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்ப...