நெல் அறுவடை பணிகள் தீவிரம் : விளைச்சலும், விலையும் இன்றி விவசாயிகள் திண்டாட்டம்

நெல்லை: நெல்லை சுற்று வட்டார பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நெல்லுக்கு உரிய விலையின்றி விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் நடப்பு பிசான சாகுபடி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. வடகிழக்கு பருவமழை பெய்யாவிட்டாலும், அணைகளில் இருந்து நெல்லை கால்வாயில் விடப்பட்ட தண்ணீரை கொண்டு நெல்லை சுற்றுவட்டார விவசாயிகள் வேளாண் பணிகளை மேற்கொண்டனர். நெல்லை சுற்றுவட்டார பகுதிகளான அருகன்குளம், கட்டுடையார் குடியிருப்பு, பாலாமடை, செப்பறை, ராஜவல்லிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

நெல்லை அருகே பல இடங்களில் தற்போது அறுவடையும் நடந்து வருகிறது. விளைச்சல் மற்றும் நெல்லுக்கு உரிய விலையில்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஒரு கோட்டை(150 கிலோ) ரூ.2300க்கு எடுத்துச் செல்ல வியாபாரிகள் தயாராக உள்ளனர். பொடி நெல் என்றால் ஒரு கோட்டை 2500க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து அருகன்குளம் பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு வயல்களில் ஒன்றரை மேனி விளைச்சல் கிடைத்த நிலையில், இவ்வாண்டு முக்கால் மேனி கூட கிடைக்கவில்லை. ஒரு கோட்டை நெல்லுக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் விலை கிடைத்தால் ஓரளவுக்கு போதுமானதாக இருக்கும். வியாபாரிகள் 700 ரூபாய் குறைத்தே கேட்கின்றனர்.

ஒரு ஏக்கருக்கு 3 உழவு செய்ய மட்டுமே ரூ.2500 ஆகிறது. வரப்பு தறிக்க, நடுவை கூலி, களையெடுப்பு, அறுவடை என செலவு ரூ.15 ஆயிரம் வரை வந்து விடுகிறது. இவ்வாண்டு விளைச்சலும் சரியாக இல்லை. நெல் பொதியாக இருந்த நேரத்தில் ஒரு மழை பெய்திருந்தால் நல்ல மேனி கிடைத்திருக்கும். மழையின்மையால் அறுவடையில் நெல்லில் சாவி, சண்டு அதிகமுள்ளது. விவசாய செலவுகளை ஈடுகட்ட வியாபாரிகள் கேட்ட விலைக்கே விற்று வருகிறோம்.’’ என்றனர். நெல் அறுவடைக்கு பாலாமடை, அருகன்குளம் பகுதிகளில் தற்போது கூலியாட்களும் தட்டுப்பாடாக உள்ளது. எனவே விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 500க்கு வாடகைக்கு அமர்த்தி அறுவடை நடத்தி வருகின்றனர்.

வைக்கோல் விற்பனையில்லை

நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை நடந்து வரும் நிலையில் கேரள வியாபாரிகள் வழக்கம்போல் வைக்கோல் வாங்கி செல்ல வந்து செல்கின்றனர். இவ்வாண்டு வறட்சி தலைவிரித்தாடும் நிலையில், வரும் கோடை காலத்தை கருத்தில் கொண்டு விவசாயிகள் வைக்கோலை விற்பனை செய்ய தயாராக இல்லை. வரும் மே மாதத்தில் கால்நடைகளுக்கு தீவனமாக வைக்கோலை பயன்படுத்த வேண்டியது வரும் என்பதால் விவசாயிகள் அவற்றை கட்டுக்களாக கட்டி படப்பு அடைந்து வைக்கின்றனர். கங்கை கொண்டான் பகுதியில் மட்டும் ஒரு கட்டு ரூ.50க்கு விற்பனையாகி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: