தலைமுடியில் உயிரி உரம் தயாரித்து அரசு பள்ளி மாணவிகள் அசத்தல் : மாநில போட்டிக்கு தேர்வு பெற்றனர்

காரைக்குடி:  மனித தலைமுடியில் இருந்து தாவரங்களுக்கு தேவையான உயிரி உரம் தயாரித்து அரசு பள்ளி மாணவிகள் சமர்ப்பித்த ஆய்வறிக்கை மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. காரைக்குடி முத்துபட்டணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பவித்ரா, பெனட்ஆஷா, அகிலாண்டேஸ்வரி, கார்த்திகேயஸ்வரி, நந்தினி ஆகியோர் வீணாகும் தலைமுடியில் இருந்து உபயோகமான பொருட்கள் தயாரித்தல் என்ற செயல்திட்டத்தை மாவட்ட அளவில் நடந்த செயல்திட்ட காட்சிப்படுத்துதலில் சமர்ப்பித்தனர். அறிவியல் ஆசிரியர் ஆஞ்சலாமேரி உதவியுடன் சமர்ப்பித்த இந்த ஆய்வறிக்கை மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னையில் நடக்கவுள்ள மாநில அளவிலான செயல்திட்ட காட்சிபடுத்துதல் போட்டியில் குழு தலைவி மாணவி பவித்ரா கலந்து கொள்கிறார். தேர்வு பெற்ற மாணவிகளை தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமிசத்தியமூர்த்தி, தலைமையாசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி பவித்ரா மற்றும் குழுவினர் கூறுகையில், ‘வீணாகும் தலைமுடியில் இருந்து பல்வேறு உப பொருட்கள் தயார் செய்யலாம். குறிப்பாக இதிலிருந்து கயிறு, விக், சவுரி முடி மற்றும் கலரிங் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தலைமுடியில் கரோட்டின் என்ற புரதம் உள்ளது.

இதிலுள்ள சிஸ்டைன் என்ற அமினோ அமிலம் சாக்லேட் தயாரிக்க பயன்படுகிறது. தலைமுடியை ஒரு குழியிலிட்டு அதன்மேல் தாவர கழிவுகளை போட்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். இது இரண்டு வருடத்தில் மக்கி போகும். இந்த மக்கிய மண்ணில் தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து அதிகமாக கிடைக்கும். ரசாயன உரங்களை விட, வீணாகும் தலைமுடியை தாவரங்களுக்கு சிறந்த உயிரி உரமாக பயன்படுத்த முடியும். சாதராண மண்ணில் ஒரு செடி முளைக்க பல நாட்கள் ஆகும். ஆனால் இந்த உயிரி உரம் கலந்த மண்ணில் விதைப்பு செய்தலால் ஓரிரு நாளில் செடி முளைத்துவிடும். தலைமுடியில் இன்னும் பல்வேறு ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: