ஒகேனக்கல் மலைப்பாதையில் உலா வரும் யானைகளுடன் செல்பி எடுக்கும் வாலிபர்கள்

பென்னாகரம்: ஒகேனக்கல் மலைப்பாதையில் உலா வரும் யானைகளை கண்காணித்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பென்னாகரத்தில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் பண்ணப்பட்டிபகுதியில் தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கடி சாலையை கடந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டதும் உற்சாக மிகுதியில் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர், அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து யானைகளுக்கு மிக அருகாமையில் சென்று படம் எடுத்து வருகின்றனர்.

இதனால், விபரீதம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளதால் யானைகளை பாதுகாப்பாக விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒகேனக்கல் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் அடிக்கடி சாலையோரம் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

இதனைக்கண்டதும் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை திருப்பிக் கொண்டு ஓட்டம் பிடிக்கும் நிலை காணப்படுகிறது. ஆனால், ஒரு சில சுற்றுலா பயணிகள் அபாயத்தை உணராமல் யானைகளை படம் பிடிப்பதாக கூறிக்கொண்டு மிக அருகாமையில் சென்று செல்பி எடுத்து வருகின்றனர். இந்த செயல் யானைகளை சீண்டி பார்ப்பதாக உள்ளது. மேலும், இந்த யானைகள் எப்போதும் வேண்டுமானாலும் ஊருக்குள் வரக்கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: