திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபட்டனர்.திருவண்ணாமலையில், மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 11.53 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 9.32 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினர். இந்நிலையில், பவுர்ணமியின் 2ம் நாளான நேற்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். காலை 10 மணிவரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதன்பிறகு, வெயில் சுட்டெரித்ததால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. மீண்டும், மாலை 4 மணிக்கு பிறகு கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

நள்ளிரவு வரை பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்றனர். பவுர்ணமியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பும், சுவாமிக்கும், அம்மனும் சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மாசி மகம் நட்சத்திர தினத்தன்று கிரிவலம் செல்வது சிறப்பு என்பதால், நேற்று கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தது. முக்கிய நகரங்களில் இருந்து நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்காலிக பஸ் நிலையங்களும் செயல்பட்டன.

மேலும், பவுர்ணமியை முன்னிட்டு வழக்கம் போல நேற்றும் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது.

பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது. எஸ்பி சிபிசக்ரவர்த்தி தலைமையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை  சென்னை சாலையில் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறுவதால், ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளது. எனவே, அந்த வழியாக தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை பயணிகளின் வசதிக்காக, காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள திறந்த வெளி மைதானத்தில், சென்னை வழித்தட சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: