மேகதாது அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி : மேகதாது அணை தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. காவிரி ஆற்றில் புதிதாக 5,912 கோடி ரூபாய் செலவில் மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்து மின்சார உற்பத்திக்காவே இந்த அணை கட்ட முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த நிலையில், நீர்வள ஆணையமும் அனுமதி அளித்தது.

கர்நாடகா காவிரி நதிநீர் பங்கீட்டை தமிழகத்துக்கு முறையாக வழங்காததாக ஏற்கனவே அதிருப்தி நிலவும் நிலையில், மேகதாதுவில், கர்நாடக அரசு அணை கட்ட தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார். அதில் மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டிவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். இந்த விரிவான திட்ட அறிக்கையையும் வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் ன கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகாவுக்கு அளித்த அனுமதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மேலும் இதுகுறித்து 3 வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: