ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதி அளித்த தனிநீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி ஐ.ஜி முருகன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

ஐ.ஜி முருகன் மீது பெண் எஸ்.பி புகார்:

லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி-ஆக உள்ள முருகன் மீது, அதே பிரிவில் பணியாற்றும் பெண் எஸ்.பி ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி.சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவிட்டார். புகாரை விசாரித்த விசாகா குழு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி முருகன் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், லஞ்ச ஒழிப்பு துறையிலேயே விசாரணை குழு உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதேபோல முருகனை பணியிடமாற்றம் செய்யக்கோரி புகார் தெரிவித்த பெண் எஸ்.பியும் மனு தாக்கல் செய்தார்.

தனிநீதிபதி உத்தரவு:

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி எஸ்.எம்.சுரமணியம் கடந்த வாரம் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், தற்போது விசாரணை நடத்தி வரும் விசாகா கமிட்டி, 2 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும், அதேபோன்று சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் எனவும் உத்தரவிட்டார். அதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த வேண்டும் எனவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார்.

ஐ.ஜி முருகன் மேல்முறையீடு - சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்காலத் தடை:

தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி.முருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளனர். ஏற்கனவே உள்ள நிலை தான் நீடிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்.27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். மேலும் 27ம் தேதியன்று முழுமையான வாத பிரதிவாதங்களை கேட்டபின்பு இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: