காங்கிரஸ் தொகுதி இன்று தெரியும்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு விவரம் இன்று மாலை  அறிவிக்கப்பட இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்து, மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், திமுக எம்.பி. கனிமொழி, அகமது படேல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர், கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி:

தமிழகத்தில் பாமகவை பொறுத்தமட்டில் தன்னை ஒரு சமூகநீதி கட்சியாக முதலில் அறிமுகம் செய்துகொண்டு அரசியல் களத்தில் இறங்கியது. ஆனால், தற்போது அதிமுக மற்றும் பாஜவோடு கூட்டணி அமைத்து அதற்கு எதிரான செயலில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சி தனது கொள்கையை குழிதோண்டி புதைத்துள்ளது.    தேர்தல் கூட்டணி என்பது குறைந்தபட்ச கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும். இதில், முதலாவதாக பாமக தனது தேர்தல் கூட்டணி குறித்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. தற்போது, பாஜ - அதிமுகவுடன் இணைந்துள்ளது.

யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பது ஒரு அரசியல் பிழையாகும். அத்தகைய வரலாற்று தவறைதான் பாமக செய்துள்ளது. இதை  நினைத்தால் வருத்தமாக உள்ளது. அதிமுக மீது பல்வேறு ஊழல் புகார்களை கூறி வந்த பாமக, அதற்கு தற்போது என்ன பதில் சொல்லப் போகிறது?  மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி செய்துள்ள தொகுதி பங்கீடு விவரங்களை, இரு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளை (இன்று) மாலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: