அதிமுக அணியில் பாஜவை சேர்த்ததற்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு: ஓரிரு நாளில் முக்கிய முடிவை அறிவிக்க போவதாக எச்சரிக்கை

சென்னை: அதிமுக அணியில் பாஜவை சேர்த்ததற்கு அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓரிரு நாளில் முக்கிய முடிவை அறிவிக்க போவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி(மனித நேய ஜனநாயக கட்சி), தனியரசு(கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன், பாஜவை கூட்டணி சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது மக்கள் விருப்பத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் அதிமுக அணியில் பாஜவுக்கு 5 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு எதிரான முடிவை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. என்ன முடிவு அறிவிக்க போகிறோம் என்பதை இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:

தமிமுன் அன்சாரி(மனிதநேய ஜனநாயக கட்சி): முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1999ல் கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் இனி ஒரு காலத்திலும் பாஜவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்று பேசினார். அன்று முதல், அவர் சாகும் வரை அதில் உறுதியாக இருந்தார்.  பிற கட்சிகளுடன் நட்பு வைத்திருப்பது போல பாஜவுடன் நட்பு வைத்திருந்தார் அவ்வளவு தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் லேடியா? மோடியா? என்று கேட்டு நாட்டை அதிர வைத்தார். அதற்கு பரிசாக அவருக்கு 37 தொகுதிகளை தமிழக மக்கள் வழங்கினார்கள். இன்று ஜெயலலிதாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக பாஜவுடன் கூட்டணி என்று அதிமுக தலைமை முடிவு எடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. வேதனை அளிக்கிறது. அதிர்ச்சி அளிக்கிறது.

இது அதிமுக அடிமட்ட தொண்டர்களின் முடிவுகளுக்கு எதிரானது. இது பொருந்தா கூட்டணி மட்டுமல்ல. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கூட்டணியும் கூட. கடந்த காலங்களில் பாஜ தமிழ்நாட்டை எவ்வாறு வஞ்சித்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கூட பாஜவையும், மோடியையும் எதிர்க்கிறார்கள் என்பது தான் உண்மை. இந்த சூழ்நிலையில் தங்களுக்கான தோல்வியை தாங்களே தேடிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்காக நாங்கள் பரிதாபப்படுகிறோம். மனிதநேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வருகிற 28ம் தேதி சென்னையில் நடைபெறும் தலைமை நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்வோம். ஜனநாயக கட்சிகள் எல்லோருமே இந்த கூட்டணியை எதிர்க்கிறார்கள். எங்களோடு இது சம்பந்தமாக பேசியும் வருகிறார்கள்.

தனியரசு(கொங்கு இளைஞர் பேரவை):  தமிழக மக்களுக்கும், உரிமைகளுக்கும் எதிராக செயல்பட்ட பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது வருத்தமாக உள்ளது. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய   சொன்னோம். ஆனால் செய்யவில்லை. இது அவர்களின் கட்சியின் முடிவு. அவர்களின் சுதந்திரத்தில் தலையிட முடியாது. பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு எதிராக என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்பதை சரியான ேநரத்தில் அறிவிப்போம்.  அந்த முடிவு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முடிவு இருக்கும்.  இன்னும் 3 நாட்களில் அந்த முடிவு அறிவிக்கப்படும். எங்களுடைய முடிவு  ஆளுங்கட்சிக்கு எதிராக இருக்குமா? என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆதரவாக இருக்குமா? என்பதையும் சொல்ல முடியாது. 3 நாட்களில் முடிவை அறிவிப்போம்.

கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை): அதிமுக, பாஜ கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான கூட்டணி அல்ல. முழுக்க முழுக்க சுயநலத்துக்காக அமைக்கப்பட்ட கூட்டணி. தேர்தலுக்காக தமிழர்களுக்கு விரோதமான கூட்டணியை அமைத்துள்ளனர். இந்த தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். பாஜவுடன் கூட்டணி வைக்கும் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது. மத்திய பாஜ அரசு தொடர்ந்து தமிழக மக்களின் நலனை புறக்கணித்து வருகிறது. தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகிறது. கஜா புயலில் டெல்டா மாவட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்திருந்தனர். அந்த மக்களை பார்க்க கூட பிரதமர் வரவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். கடந்த மாதம் முதல் அதிமுக அரசு தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டுக்களை குறி வந்த பாமக, கொள்கைக்கு அப்பாற்பட்டு கூட்டணி அமைத்துள்ளதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: