பாமகவுக்கு இணையான தொகுதி வேண்டும் தேமுதிக பிடிவாதத்தால் கூட்டணி முடிவில் இழுபறி: கண்டுகொள்ளாத அதிமுக

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.  நேற்று மாசி மகம் என்பதால் அதிமுக தனது கூட்டணிகளை முடிவு செய்து தொகுதிகளை இறுதி செய்து விடுவதில் உறுதியாக இருந்தது. அதற்கான பணிகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தீவிரப்படுத்தினர். அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் இடம்பெற உள்ளது. எனவே அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கி கூட்டணியை முடிவு செய்துவிட வேண்டும் என்று நேற்று அதிமுக தரப்பு திட்டமிட்டது. அதற்காக ஏற்கனவே, அமைச்சர் தங்கமணி தேமுதிக தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்நிலையில், பாஜ உடன் தொகுதி பங்கீடு முடிந்த உடன் நேற்று நேரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்று கூட்டணியை முடிவு செய்து தொகுதிகளை அறிவித்து விடலாம் என்று திட்டமிட்டனர்.

அதற்கான ஏற்பாடுகளையும் அதிமுக தரப்பு செய்தது. ஆனால், தேமுதிகவுக்கு 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக அதிமுக தெரிவித்திருந்தது. இந்நிலையில், பாமகவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் அதிமுக ஒதுக்கியது. இது தேமுதிக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பாமகவுக்கு வட மாவட்டங்களில் மட்டும்தான் செல்வாக்கு உள்ளது. ஆனால் தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வாக்கு வாங்கி இருக்கிறது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்பட்டதையும் நினைத்து பார்க்க வேண்டும். எனவே பாமகவுக்கு இணையாக அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது போல 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் இருந்து திடீரென நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.

  இதனால், இன்று கூட்டணியை இறுதி செய்ய முடிவு செய்திருந்த அதிமுக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட்டனர். திமுகவில் எதிர்பார்த்த தொகுதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் அந்த பக்கம் தேமுதிக செல்ல வாய்ப்பில்லை. எனவே, இப்படியே கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட்டணிக்காக தேமுதிக, அதிமுகவை தேடி வரும் நிலை ஏற்படும். அப்போது ஓரிரு சீட் கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து போட்டுக் கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  இருதரப்பும் தொகுதி பங்கீட்டில் பிடிவாதமாக இருப்பதால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: