வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை வழக்கில் சென்னை யோகா மாஸ்டருக்கு ஆயுள்: திருச்சி மகிளா கோர்ட் தீர்ப்பு

திருச்சி: வரதட்சனை கொடுமையால் மனைவி தற்கொலை செய்த வழக்கில் சென்னை யோகா மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. சென்னை போரூர் காரம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் செல்வகணபதி (33). யோகா மாஸ்டர். இவருக்கும் திருச்சி ரங்கம் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்த ராஜலட்சுமிக்கும் கடந்த 12-4-2012ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது ராஜலட்சுமிக்கு நகை, பணம் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு செல்வகணபதி மனைவியை கொடுமைப்படுத்தி வந்தார். வரதட்சணை கொடுமையால் 12-7-15ல் ராஜலட்சுமி ரங்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து செல்வகணபதியை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட மரணத்துக்கு 304 (பி) பிரிவின்கீழ் ஆயுள் தண்டனையும் ரூ. 5ஆயிரம் அபராதமும், வரதட்சணை கொடுமை வழக்கில் 498 (ஏ) பிரிவின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார். இதனை ஏககாலத்தில் அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் செல்வகணபதியின் தாய் கோமதி, அக்கா ருக்மணி, இவரது கணவர் சுப்ரமணி ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டார். தீர்ப்பை அடுத்து செல்வகணபதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: