மதுரையில் முகமூடிக்கும்பல் அட்டகாசம் அடகுக்கடையை உடைத்து 1,500 சவரன் கொள்ளை

மதுரை: மதுரையில் அடகு கடையை உடைத்து ரூ3.50 கோடி மதிப்புள்ள 1,500 சவரன் நகைகள், ரூ9 லட்சம் பணத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை, நரிமேடு, மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (45). இவர் கட்டபொம்மன் நகரில் 3 ஆண்டுகளாக வீட்டின் முன்பகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். குலமங்கலம், எஸ்.ஆலங்குளம், செல்லூர், நரிமேடு, பீபிகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், நகையை இங்கு அடமானம் வைத்து பணம் வாங்கி செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ, லாக்கர் வெல்டிங் மிஷின் மூலம் உடைக்கப்பட்டு,

அதில் இருந்த 1,500 சவரன் நகைகள், ரொக்கம் ரூ9 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. போலீசார் கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது முகமூடி அணிந்த 3 பேர் உள்ளே வந்ததும், பின்பு அவர்கள் கேமராவை உடைத்ததும் பதிவாகியிருந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ3.50 கோடி. அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

புகாரை ஏற்க மறுத்த போலீஸ்

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது நேற்று காலையிலேயே தல்லாகுளம் போலீசில் கோபிநாத் புகார் கொடுத்தார். 1,500 சவரன் நகை கொள்ளை என்பதை முதலில் போலீசார் ஏற்க மறுத்தனர். பின்னர் கோபிநாத் உரிய ஆவணங்களை கொண்டு வந்தார். இவற்றை மாலை வரை போலீசார் ஆய்வு செய்து இரவு 7 மணியளவில் புகாரை ஏற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: