தெலங்கானா மாநிலத்தில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த சென்னையை சேர்ந்தவர் உட்பட 5 பேர் கைது: ரூ3.12 லட்சம், கம்ப்யூட்டர்கள் பறிமுதல்

திருமலை: தெலங்கானாவில் போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ3.12 லட்சம், கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத், நாம்பல்லி,  கோல்கொண்டா உள்ளிட்ட பகுதிகளில் சிலர் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஐதராபாத் வடக்கு மண்டல காவல்துறை ஆணையாளர் அஞ்சனிகுமார் உத்தரவின்பேரில் துணை ஆணையாளர் ராதாகிருஷ்ணராவ், இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ், எஸ்ஐக்கள் ரவி, காந்த், ராஜசேகர்ரெட்டி மற்றும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நாம்பல்லி, கோல்கொண்டா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்து வந்த 5 பேர் கும்பலை, போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் ஐதராபாத்தை சேர்ந்த முகமது அப்துல் ரஹீம்முதின்(42), கோல்கொண்டாவை சேர்ந்த  சலித்கான்(40),  சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ்(49),  ஐதராபாத் டாப்பாச்சாபுத்ராவை சேர்ந்த சையத் உம்ரான், ஐதராபாத் பனாக்ராமாவை சேர்ந்த முகமது சகிருதீன் என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வருவதற்கான போலி பாஸ்போர்ட் மற்றும் விசா உட்பட ஆவணங்களை தயார்  செய்து வந்துள்ளனர்.

ஒரு பாஸ்போர்ட்டுக்கு ரூ35 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரையிலும், விசா வழங்க ரூ3 லட்சம் முதல் ரூ4 லட்சம் வரையிலும் வசூலித்துள்ளனர். அவர்களிடமிருந்து 88 பாஸ்போர்ட்டுகள், 3 போலி பாஸ்போர்ட்டுகள்,  ரப்பர் ஸ்டாம்புகள், 3  கம்ப்யூட்டர்கள், 5 செல்போன்கள், ரூ3 லட்சத்து 12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், போலி பாஸ்போர்ட், விசா தயாரிக்கும் நபர்களை அணுக வேண்டாம். போலி பாஸ்போர்ட், விசா மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பிடிபட்டால் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாக நேரிடும்.  எனவே, பொதுமக்கள் அரசு நிபந்தனைகளின்படி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் மற்றும் விசா பெற வேண்டும் என்று காவல்துறை ஆணையாளர் அஞ்சனிகுமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: