அவசரநிலை பிரகடனம் அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு

வாஷிங்டன்:  அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்த அதிபர் டிரம்ப் முடிவுக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க, மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் அமைக்கப்படும் என 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது டிரம்ப் வாக்குறுதி கொடுத்தார். இதனை தொடர்ந்து அதிபரான அவர்  எல்லையில் தடுப்பு சுவர் எழுப்பும் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். இதற்காக நிதி ஒதுக்கும்படி நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயக  கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக சுவர் எழுப்புவதற்காக நிதியை பெற முடியவில்லை.

Advertising
Advertising

இந்நிலையில், நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து சுவர் எழுப்ப நிதி பெற டிரம்ப் திட்டமிட்டுள்ளார். சுவர் எழுப்புவதற்கான நிதியை பெறுவதற்கான மசோதாவிலும்  அதற்காக, அவசரநிலையை பிரகடனப்படுத்தும்  உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.  ஆனால், அதிபரின் அவசரநிலை பிரகடன முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிபரின் முடிவுக்கு எதிராக சட்டத்தின்  மூலம் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.  கலிபோர்னியா, கொலோராடோ, கனெக்டிகட், ஹவாளி, மேரிலேண்ட், நியூஜெர்சி, நியூ மெக்சிகோ, நியூயார்க், ஒரேகான், விர்ஜினியா உள்ளிட்ட 16 மாகாணங்கள், அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து வழக்கு  தொடர்ந்துள்ளன. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மாவட்ட பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், ‘அதிபரின் அவசர நிலை பிரகடனமும், நிதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதும் அரசியல் சாசனத்திற்கு  எதிரானது. எனவே, அவசரநிலை பிரகடனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: