அஞ்சல் துறை ஏடிஎம்மில் 2 லட்சம் பேர் பணம் எடுக்க முடியாமல் தவிப்பு: டெபிட் கார்டு வழங்காமல் இழுத்தடிப்பு

சென்னை: தமிழக அஞ்சல்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்கிய 2 லட்சம் புதிய  வாடிக்கையாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஏடிஎம் கார்டு வழங்கப்படவில்லை.  இதனால், அவர்கள் அவசரத்துக்கு பணம் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்திய  அஞ்சல் துறை வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ஏற்கனவே உள்ள  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளில்  ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2015ம் ஆண்டு அஞ்சலகங்களில்  சேமிப்பு கணக்குகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளில் உள்ளது போன்று  ஏ.டி.எம் கார்டுகளை  வழங்கியது. தமிழகத்தில் முதன்முதலாக  சென்னையில் தொடங்கப்பட்ட இந்த சேவை பின்னர் படிப்படியாக தமிழகத்தில் உள்ள  கிளை அஞ்சலகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு சேமிப்புக்கணக்குகளை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதேபோல்,  முக்கிய அஞ்சலகங்களில் வாடிக்கையாளர்கள் கவுண்டர்களுக்கு சென்று பணத்தை  எடுப்பதை தவிர்க்கும் பொருட்டு ஏ.டி.எம் மையங்களும் ஏற்படுத்தப்பட்டன.  தற்போது தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களுக்குள் 97 ஏ.டி.எம் மையங்கள்  செயல்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் 21 ஏ.டி.எம் மையங்கள் செயல்பட்டு  வருகின்றன. அஞ்சலக ஏ.டி.எம்.களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட வந்த இந்த  ஏ.டி.எம் கார்டுகளை அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பயன்படுத்தும் வகையில்  வசதி ஏற்படுத்தப்பட்டது. மேலும், சேமிப்பு கணக்குகளில் புதிய  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க அஞ்சலகங்கள் அதன்  விவரத்தை மத்திய அஞ்சல் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பும். பின்னர், மத்திய  அஞ்சல் துறை இயக்குனரகம் பெங்களூரில் உள்ள நேஷனல் ஏ.டி.எம் யூனிட்டிடம்  தேவைப்படும் ஏ.டி.எம் கார்டுகளை குறிப்பிட்ட அஞ்சலகங்களுக்கு அனுப்பும்படி  கோரும்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் புதிய  சேமிப்பு கணக்கு தொடங்கிய 2 லட்சம் புதிய வாடிக்கையாளர்களுக்கு கடந்த 4  மாதங்களாக ஏ.டி.எம் கார்டு வழங்கப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள்  ஏ.டி.எம் மையங்களை பயன்படுத்துவது குறைந்துபோயுள்ளது. ஏ.டி.எம் கார்டு  வழங்குவதில் ஏற்படும் தொடர் தாமதத்தால் சேமிப்புக் கணக்குகளை  தொடங்குவதிலும் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவதை தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

அஞ்சலகங்களில்  சேமிப்பு கணக்கு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏ.டி.எம் கார்டுகளை  பெங்களூரில் உள்ள நேஷனல் ஏ.டி.எம் யூனிட் தான் அனுப்பும். கடந்த 2018ம்  ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து டிசம்பர் வரையில் 5 லட்சம் புதிய சேமிப்பு  கணக்குகள் அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருப்பு  வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ஏ.டி.எம் கார்டுகள்  வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது.  ஏ.டி.எம் கார்டுகளை  அனுப்பும் நிறுவனம் ஏ.டி.எம் கார்டுகளை அனுப்பவில்லை. இதனால், கடந்த 4  மாதமாக மீதம் உள்ள 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் கார்டுகளை  கொடுக்கமுடியவில்லை. விரைவில் சம்பந்தப்பட்ட புதிய வாடிக்கையாளர்களுக்கு  ஏ.டி.எம் கார்டுகள் கொடுக்கப்படும். தொலைபேசி மூலமாக வாடிக்கையாளர்களை வர  வைத்தோ அல்லது தபால் மூலமாகவோ ஏ.டி.எம் கார்டுகள் முறையாக சென்றுவிடும்.  வாடிக்கையாளர்கள் சேவையில் எந்த இடையூறும் ஏற்படாது. இதற்கான நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: