சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனத்தை எதிர்த்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இருவரும் விடுப்பில் அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இடைக்கால இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர், “சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் விதியை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை கவனத்தில் கொள்ளாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, இதனை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால் தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று கோகாய் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ.க்கு முழுநேர இயக்குநர் நியமிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு நியமனத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: