×

சிவகாசியில் நூறு நாட்களுக்கு பின் டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலை திறப்பு : தொழிலாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி:  சிவகாசியில் நூறு நாட்களுக்கு பின் டிஆர்ஓ உரிமம் பெற்ற 150க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் நேற்று திறக்கப்பட்டதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதாக கூறி, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைகோரிய வழக்கில் உச்சநீதிமன்றம், பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தக்கூடாது. பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும். பண்டிகை நாட்களில் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நவ. 13ம் தேதி முதல் 1,070 பட்டாசு ஆலைகளை மூடி, ஆலை உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கினர்.

இதனால், சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர். பட்டாசு ஆலைகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை கடந்த 100 நாட்களாக பட்டாசு  தொழிலாளர்கள் நடத்தினர். பட்டாசு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல், இடைக்கால தீர்ப்பின்படி பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும் என கலெக்டர் சிவஞானம் வலியுறுத்தினார். இதன்படி, ஒரு சில ஆலைகள் மட்டுமே திறக்கப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வழக்கு நாளை (பிப். 20) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 209 டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் 150க்கும் மேற்பட்ட ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. சென்னை, நாக்பூர்  உரிமம் பெற்ற ஒரு சில பட்டாசு ஆலைகளும் நேற்று திறக்கப்பட்டன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மூன்று மாதகாலமாக வேலையின்றி தவித்த அவர்கள் நேற்று உற்சாகத்துடன் வேலைக்குச் சென்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர் குமார் கூறுகையில், ‘‘தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிக்கப்படுவதால், பட்டாசு ஆலைகளை மீண்டும் திறந்துள்ளோம். பட்டாசு தொழில் பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை (இன்று) முதல் பெரும்பாலான ஆலைகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sivakasi ,plant , Sivakasi, fireworks plant, workers
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...