×

வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி : நீர் நிலைகளை தேடி செல்லும் யானைகள்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலியாக, நீர்நிலைகளை தேடி யானைகள் கூட்டம், கூட்டமாக செல்கின்றன.கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 200க்கும் மேற்பட்ட யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனப்பகுதிகளில் முகாமிட்டவாறு, அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதில், 70க்கும் மேற்பட்ட யானைகள், கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட நிலையில், சுமார் 30 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர், தாவரக்கரை வனப்பகுதிகளில் முகாமிட்டு, தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், வனப்பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக போதிய உணவு, தண்ணீர் கிடைக்காததால் யானைகள் நீர்நிலைகளை தேடி கிராமங்களுக்குள் படையெடுத்து வருகின்றன.

தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் காப்பு காட்டில் வசித்து வரும் யானைகள், ஆண்டு முழுவதும் பெட்டமுகிலாளம் சாலையில் உள்ள சாமை ஏரியில் தண்ணீர் குடிப்பது வழக்கம். தற்போது, அய்யூர் வனப்பகுதியிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. காலை, மாலை மற்றும் மதிய நேரங்களில் குட்டிகளுடன் அய்யூர் சாமை ஏரியில் முகாமிட்டு, யானைகள் தண்ணீர் குடித்து செல்கின்றன. அய்யூர் சாமை ஏரியில் தினமும் யானைகள் கூட்டம் தண்ணீர் குடிக்க வருவதால் அப்பகுதியில் செல்வோர் செல்போன் மூலம் படம் எடுப்பதும், கூச்சலிடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற செயல்களை செய்வதால், யானைகள் மிரண்டு மனிதர்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, அய்யூர் சாமை ஏரி பகுதியில் தண்ணீர் குடிக்க வரும் யானை கூட்டத்தை பாதுகாக்க வேண்டுமென, வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drought , Forests, drought, elephants
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!