வேலூரில் ஓடும் பஸ்சில் இறந்த மூதாட்டி சடலத்தை சாலையில் வீசி சென்ற கொடூரம்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்ல மூதாட்டி ஒருவர் பாகாயம் வரை செல்லும் தனியார் பஸ்சில் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் ஏறினார். சிறிது தூரத்தில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் வந்தபோது பஸ்சில் இருந்த மூதாட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கூறியுள்ளனர். அவர்கள் மூதாட்டியுடன் வந்தவர்கள் யாராவது உள்ளார்களா? என பார்த்தனர். ஆனால் யாரும் இல்லாததால் மூதாட்டியின் சடலத்தை டிரைவரும், கண்டக்டரும் சித்தூர் பஸ் நிலையம் அருகில் சாலையோரம் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அவர் கொண்டு வந்த பையில் இருந்த ஒரு சால்வையை எடுத்து அந்த மூதாட்டி மீது மூடிவிட்டு பஸ்சை எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இறந்துபோன மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த பூஷணம்(60) என்பதும், அவர் தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பும்போது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து இறந்த பூஷணத்தின் மகன் மஞ்சுநாத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து அவரது மகன் கார் மூலம் தனது தாய் உடலை சொந்த ஊரான செய்யாறுக்கு கொண்டு சென்றார். மனிதாபிமானம் சிறிதுமின்றி மூதாட்டியின் சடலத்தை சாலையில் வீசி சென்ற கண்டக்டர், டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் வழக்கு பதிவுக்கு பயந்து மூதாட்டியின் சடலத்தை பஸ்சில் இருந்து இறக்கி சாலையில் வீசிவீட்டு சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பஸ் டிரைவர், கண்டக்டரின் இந்த செயல் மனிதாபிமானமும், மனித நேயமும் குறைந்து வருவதற்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: