ஏரல் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம் : 48 ஆண்டு கால கனவு நனவானது, பொதுமக்கள் வரவேற்பு

ஏரல்: ஏரல் தாமிரபரணி ஆற்றின் உயர்மட்டப் பாலத்தில் ரூ.20 லட்சம்  செலவில் மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. 48 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில்  ஏரல் மூன்றாவது பெரிய வணிக நகரமாக உள்ளது. இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் தரைவழிப் பாலமாக இருந்ததை 1970ல் குழாய்கள் பதிக்கப்பட்டு தாம்போதி பாலம் அமைக்கப்பட்டு முதன் முதலில் ஏரல் ஆற்றுப் பாலம் வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து ஏரல்  குரும்பூர் வழியாக பல ஊர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது. ஆனால் பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படாததினால்  இரவு நேரத்தில் பாலம் இருளில் மூழ்கி போய் இருந்தது.

மேலும் மழைக்காலத்தில்  ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் போதெல்லாம் தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ஏரல்  வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தாம்போதி பாலத்தில் மின் விளக்கு அமைத்து தர வேண்டும் என்றும் மேலும் தாம்போதி பாலம் தண்ணீரில் மூழ்கி வருவதால்  உயர்மட்ட பாலம் அரசு கட்டித்தர வேண்டும் என்றும் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அரசு நடவடிக்கை எடுத்து தாம்போதி  பாலம் அருகிலேயே ரூ.16 கோடி 50 லட்சம் செலவில் உயர்மட்ட பாலம் அமைத்தது.  

இந்த பாலத்தினை அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா 2016 பிப்.14ம் தேதி  போக்குவரத்திற்கு திறந்து வைத்தார். ஆனால் புதிய பாலத்திலும் கடந்த மூன்று  ஆண்டுகளாகியும் மின் விளக்கு அமைக்கப்பட வில்லை. புதியதாக  கட்டப்பட்ட முக்காணி  ஆத்தூர் பாலம், ஆழ்வார்திருநகரி பாலம்,  ஸ்ரீவைகுண்டம் பாலம் உட்பட பாலங்களில் எல்லாம் மின் விளக்கு அமைத்த போதிலும் ஏரல் பாலம் மட்டும் மின் விளக்கு அமைக்கப்படாததினால் இருளில் மூழ்கி போய் கிடந்தது. இதனால் ஏரல் வியாபாரிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் ஏரல் ஆற்றுப்பாலத்திற்கு மின்விளக்கு அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் எம்எல்ஏ., நடவடிக்கை எடுத்து ஏரல் ஆற்றுப்பாலத்தில்  மின் விளக்கு அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து  தற்போது ஏரல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்கு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: