×

திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு நிறைவு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மூன்று நாட்கள் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவியர் ‘வனப்பகுதி ஒரு தனி உலகம்’ என பிரமித்தனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு கடந்த 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினர், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஊட்டி கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பின்போது யானைகள், மான்கள், மிளாக்கள், மண் நிற பாம்புகள், பாறை நிற ஓணான், கருப்பு மற்றும் வெள்ளை நிற மந்திகள், மலபார் மற்றும் சாம்பல் நிற அணில்களை படம் பிடித்துள்ளனர்.

வனப்பகுதியில் கணக்கெடுத்தபோது சில இடங்களில் மழையும், சில இடங்களில் அதிக வெயிலும், இரவில் கடுமையான குளிரும் இருந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றபோது, அட்டைகள் மற்றும் உண்ணிகள் கடித்ததாக கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்தனர். வனப்பகுதியில் பல்வேறு வனவிலங்குகளின் காலடி தடங்கள், மரங்களில் புலி மற்றும் சிறுத்தை நகங்களால் கீறிய தடங்களையும் பார்த்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியர் கூறுகையில், ‘‘வனவிலங்குகள் குறித்து கணக்கெடுக்க வனப்பகுதிக்குச் சென்றோம். அது ஒரு தனி உலகம். அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது,’’ என்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வன அதிகாரி முகமது சாபப் தலைமையில் ரேஞ்சர்கள் வேலுச்சாமி, பொன்னுசாமி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srivilliputhur ,Western Ghats , thiruvilliputhur, Western Ghats, Wildlife
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...