விசாரணை நீதிமன்றங்கள் குறித்த காலத்தில் வழக்கை முடிக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்குகளை முடிக்க விசாரணை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த சசிக்குமார் என்பவர் பணி நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் மருத்துவமனையில் இறந்தார். இது குறித்து சசிக்குமாரின் சகோதரர் ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில், இழப்பீடு கோரி சசிக்குமாரின் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தொழிலாளர் நலத்துறை ஆணையர், சம்பந்தப்பட்ட நிறுவனம் சசிக்குமாரின் குடும்பத்திற்கு ரூ3.94 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எம்.வி.முரளிதரன்  சசிக்குமாருக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதாக போலீசார் பதிவு செய்த வழக்கின் நிலை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், ‘இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யவில்லை. எனவே, அவினாசி குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து விட்டது. இதேபோல், 84 வழக்குகளை  மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் முடித்து வைத்துள்ளன என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பின் இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி, 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதற்காக கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டு வரை எத்தனை வழக்குகள் தமிழகம் முழுவதும் முடித்து வைக்கப்பட்டன என்று கேள்வி எழுப்பி, அதன் விவரங்களை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பனுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை பதிவாளர் குமரப்பன் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் கடந்த 2009 முதல் 2014 வரை 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் 2 லட்சத்து 14,901 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில குற்றவியல் தலைமை வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி டிஜிபியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களில் 2010 முதல் 2018 வரை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 72,602 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  இந்த வழக்குகளை விரைந்து முடிக்க அனைத்து விசாரணை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகளும் தங்களிடம் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட்டு அந்தந்த மாவட்ட நீதிபதியிடம் அறிக்கை தரவேண்டும். அந்த வழக்குகள் பட்டியலிடப்பட்ட விவரங்களை தனி ரிஜிஸ்டரில் பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவை பதிவாளர் ஜெனரல் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும், தலைமை மாஜிஸ்திரேட்டுகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.

அதேபோல், டிஜிபி அனைத்து மாநகராட்சி போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் ெசய்யுமாறு அறிவுறுத்துமாறு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியது தொடர்பாக பதிவாளர் ஜெனரல் மற்றும் டிஜிபி ஆகியோர் வரும் ஜூன் 10ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் இவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு உதவிய தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியன் ஆகியோரை நீதிமன்றம் பாராட்டுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: