கடந்த 4 ஆண்டுகளில் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு 38% சரிந்தது: பற்றாக்குறையை சமாளிக்க ஒப்பந்த ஊழியர்கள் நியமனம்

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆனால், அரசு துறைகளிலும் வேலை வாய்ப்பு சரிவை சந்தித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ்அரசு துறைகளில் வேலை வாய்ப்பு 38 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பண மதிப்பு நீக்கம் காரணமாக, பண பரிவர்த்தனையை மட்டுமே நம்பியுள்ள சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. இந்த துறைகளை நம்பியிருந்த, நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்ற பல பல லட்சம் பேரின் வேலை பறிபோனது. புதிய வேலைகளும் உருவாகவில்லை. சில பெரிய நிறுவனங்களும் இந்த பாதிப்பில் இருந்து மீளவில்லை. அடுத்ததாக ஜிஎஸ்டி ரூபத்தில் சிக்கல் வந்தது. இப்போதுதான் தொழில்துறைகள் மீள தொடங்கியிருக்கின்றன.

இந்த நிலையில், அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டது புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) ஆகியவை மூலம் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து வந்தது. ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகும். ஆனால் இந்த துறைகளில் கூட வேலை வாய்ப்பு பெருகவில்லை. யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி ஆகியவை மூலம் கடந்த 2014-15 நிதியாண்டில் 1.13 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் கடந்த 2017-18 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 70,805 ஆக சரிந்து விட்டது. மத்திய அரசு அறிக்கையின்படி 2016-17 நிதியாண்டில் அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 4.12 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன.

இதுகுறித்து டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் சமீபகாலமாக அரசு துறைகளில் காலி பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் இருக்கின்றன. பெரும்பாலான துறைகளில் தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. இது அரசுக்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது. ஆனால் திறமையான பணியாளர்கள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால்தான் பணியாளர் தேர்வாணையங்கள் மூலம் நிரந்தர பணியாளர்கள் நியமன எண்ணிக்கை குறைந்து விட்டது என்றார்.

அவுட் சோர்சிங்கால் வந்தது ஆப்பு

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், வருவாய்த்துறை, அஞ்சல் துறை, கணக்காளர் உட்பட பல பணியிடங்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இதுபோல் அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் குரூப் பி, குரூப் சி பணியிடங்கள் எஸ்எஸ்சி மூலமாகவும், ரயில்வேயில் உள்ள பணியிடங்கள் ஆர்ஆர்பி மூலமாகவும் தகுதித்தேர்வு, நேர்முக தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன. 2014-15 நிதியாண்டில் உயர் பதவிகளுக்கான பணியிடங்களுக்காக 8,272 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இது 2017-18 நிதியாண்டில் 6,314 ஆக குறைந்து விட்டது. தனியார் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மூலம் அவுட் சோர்சிங் முறையில் பணிகள் ஒப்படைக்கப்படுவது காரணமாக பெரும்பாலான அரசு பணியிடங்கள் நிரப்ப வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: