நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஆம் ஆத்மியின் நிலை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலை என்ன என்பது பற்றி விரைவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இருந்து நேற்று   காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அவர், காரில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, கடந்த சில தினங்களாக கவர்னர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, மக்கள் நல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மாநில அரசுக்கு பல்வேறு தொல்லைகளையும் கொடுத்து வருகிறார். இதேபோன்ற நிலைதான் டெல்லியிலும் நடந்து வருகிறது. டெல்லி மாநில துணை நிலை ஆளுனரும் எங்களது அரசுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறார்.

Advertising
Advertising

இதை எதிர்கொண்டுதான் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். மக்களின் நலனுக்காக மாநில உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் முதல்வர் நாராயணசாமிக்கு எங்களது ஆதரவை தெரிவிக்க புதுச்சேரிக்கு செல்கிறேன். இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமென்றால், புதுச்சேரி மற்றும் டெல்லி யூனியன் பிரதேசங்களை முழு மாநில அந்தஸ்துக்கு தரம் உயர்த்த வேண்டும். டெல்லி, புதுச்சேரி மக்களும், மாநில அந்தஸ்துக்கு உயர வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே மக்களின் விருப்பப்படி இரு யூனியன் பிரதேசங்களையும் முழு மாநில அந்தஸ்துக்கு உயர்த்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் ஆம்ஆத்மி கட்சியின் நிலை என்ன என்பதுபற்றி, ஆலோசித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: