அமித்ஷா இன்று சென்னை வருகை?: அதிமுக- பாஜ கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை : பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் பட்சத்தில் அதிமுக- கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறுகிறது. முதலில் பாஜ அதிமுக அணியில் 17 இடங்களை கேட்டது. இதை கேட்டு அதிமுக அதிர்ந்து போனது. ஒற்றை இலக்க எண்ணில் தான் சீட் ஒதுக்கப்படும்  என்று அதிமுக கறாராக கூறி விட்டது. அது மட்டுமல்லாமல் பாஜவுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. இந்த தொகுதியில் தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதிக்க கூடாது என்று கண்டிப்பான உத்தரவை அதிமுக போட்டது. அதிமுக நிபந்தனை விதித்தாலும்  தென்சென்னை, திருப்பூர் தொகுதி எங்களுக்கு ஒதுக்க  வேண்டும் என்பதில் பாஜ பிடிவாதமாக இருந்து வருகிறது.

அந்த தொகுதியை தர முடியாது என்றும் அதிமுக கூறி விட்டது. இது ஒரு புறம் இருக்க, பாஜவை கூட்டணியில் சேர்க்க அதிமுகவில் சில தலைவர்களும், அதிமுகவில் கூட்டணியில் உள்ள தமிமுன் அன்சாரி, தனியரசு,  கருணாஸ் ஆகிய 3 எம்எல்ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுகவில் பாஜவை சேர்ப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. மேலும் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள பாஜவும் தயாராக இல்லை. இதனால், அதிமுக, பாஜ கூட்டணியில் சிக்கல் நீடித்து வந்தது.

 இந்த நிலையில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜ பொறுப்பாளருமான பியூஸ் கோயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பியூஸ் கோயலும் வர உள்ளார் என்ற தகவலும்  வெளியாகி உள்ளது. இதற்கான உறுதியான அறிவிப்பு பாஜ தரப்பில் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அவர்கள் தொகுதி உறுதியான பின்னரே வருவார்கள். அதன் பிறகு தான் தேசிய தலைவர் சென்னை அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது. அவர்கள் சென்னைக்கு உறுதியாக  வருகிறார்களா? என்பது இன்று காலை தான் முடிவாகும் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி-ராமதாஸ் இன்று சந்திப்பு; பாமகவை தங்கள் அணிக்குள் இழுக்க அதிமுக தீவிரமாக முயன்று வருகிறது. ராமதாசும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணியில் சேருவதற்கு 9 தொகுதிகள் வேண்டும், இந்த தொகுதிகளுக்கான செலவையும் அதிமுக  ஏற்க வேண்டும் என்று பாமக நிபந்தனை விதித்ததாகவும் கூறப்படுகிறது. கடைசியில் 7 தொகுதிகள் மற்றும் தொகுதிக்கான செலவு ஆகியவற்றை ஏற்பதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமியும் பாமக நிறுவனர் ராமதாசும் இன்று சந்தித்து பேசுகின்றனர். பின்னர் அமித்ஷாவையும் இவர்கள் சந்திக்கின்றனர். இதனால் கூட்டணி இன்று இறுதி செய்யப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: