பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய விவகாரத்தில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

சென்னை: பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய விவகாரத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனையை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் கடந்த 1998ல் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோருடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார். அப்போது போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை தவிர அரசு பஸ்கள், போலீஸ் பைக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக, பாகலூர் போலீசார் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு முதலாவதாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இதில், பாலகிருஷ்ண ரெட்டி எம்.எல்.ஏ என்பதால் அரசு சொத்தான போலீஸ் ஜீப் எரிக்கப்பட்ட வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி அமைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ10,500 அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து, பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அவர் பிப்ரவரி 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக பாலகிருஷ்ண ரெட்டி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இருவிதமான மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மற்றொன்று தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டது. இதில் முதலாவதாக வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து கடந்த 5ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்திருந்த மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,” பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பாக 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சரணடைய வேண்டும் என்பதற்கு அளிக்கப்பட்ட விலக்கு என்பது தொடரும். இருப்பினும் வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு கண்டிப்பாக தடை விதிக்க முடியாது. மேலும் இதுகுறித்து அடுத்த 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’’ என நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனால் பாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: