மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு அணி மட்டுமே போட்டியிட வாய்ப்பு: தேர்தலை புறக்கணிக்க டி.டி.வி., கமலுக்கு தொண்டர்கள் கோரிக்கை

சென்னை: டி.டி.வி.தினகரன் மற்றும் கமல்ஹாசன் கட்சியினர் தேர்தல் கூட்டணி குறித்த எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் இருப்பதால் வருகிற மக்களவை தேர்தலை இந்த இரண்டு கட்சிகளும் புறக்கணிக்கலாம் என்று கூறப்படுகிறது. இக்கட்சியின் தொண்டர்களும் தேர்தலை புறக்கணிக்க கோரி வருகின்றனர். மக்களவை பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு  இந்த மாத இறுதியில் வெளியாக  வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற முடிவு கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். அடுத்து, அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணி அமைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை.

காரணம், அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியமாகவே நடந்து வருவதாக அக்கட்சி தலைவர்களே கூறி வருகிறார்கள். கடந்த வாரம், பாஜ மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் திடீரென சென்னை வந்து, அதிமுக அமைச்சர்கள் மற்றும் முன்னணி தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேசிவிட்டு சென்றுள்ளார். ஆனாலும், இதில் இன்னும் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. திமுக, அதிமுக அணிகளை தவிர்த்து தற்போது எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனித்து செயல்படுவது டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக கட்சியும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும்தான். இந்த இரண்டு கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமையும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த இரண்டு கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எந்த நிலையிலும் ஆர்வம் காட்டாமல் உள்ளன. டி.டி.வி.தினகரனை பொறுத்தவரை, தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 18 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு எம்எல்ஏ பதவியை இழந்துள்ளனர்.

அந்த 18 தொகுதிக்கும் மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. அந்த 18 தொகுதிக்குத்தான் டி.டி.வி.தினகரன் முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது போன்று அந்த 18 தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் அல்லது அதிமுகவைவிட அதிக வாக்குகள் பெற வேண்டும் என்பதே அவரது குறியாக உள்ளது. இதனால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ அல்லது கூட்டணி அமைப்பது குறித்தோ அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளார். அக்கட்சி சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அல்லது 40 தொகுதிக்கான விருப்ப மனு வாங்குவது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். அதனால், இவரது நடவடிக்கை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வரும் என்று அக்கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

அடுத்து, நடிகர் கமல்ஹாசன். இவர் வருகிற மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்று கூறி வருகிறார். ஆனால், தேர்தல் கூட்டணி பற்றியோ, யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது பற்றியோ எந்தவித ஆலோசனை கூட்டமும் நடத்தாமல் உள்ளார். அதனால், நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது போன்று, இவரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். மக்களவை தேர்தலில் இப்போதிருக்கும் நிலையில் போட்டியிட வேண்டாம் என்ற கருத்தைத்தான் இரு கட்சி தொண்டர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதனால் தமிழகத்தில் இரண்டு முனைப்போட்டி ஏற்படவே தற்போது வாய்ப்புகள் அதிகம். டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் கட்சியினர் கூட்டணி அமைப்பதிலோ, போட்டியிடுவதிலோ வேகம் காட்டாததால், மக்களவை தேர்தலில் இந்த கட்சிகள் போட்டியிடுமா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது.

முதல்வர் திடீர் ஆலோசனை

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜ இடையே கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று அல்லது நாளை மீண்டும் சென்னை வருவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகம் வரவில்லை. அதேநேரம், அவரது இல்லத்தில் அதிமுக மூத்த அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி இறுதி முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: