இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துபவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி:  இந்தியாவில் 16 கோடி பேர் மது அருந்துவது தெரியவந்துள்ளது. சமூக நீதி மற்றும் எரிசக்தி துறை அமைச்சகம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து மது மற்றும் போதை பொருட்களை விரும்புவோர் குறித்து ஒரு ஆய்வை நடத்தின. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 186 மாவட்டங்களில் உள்ள 2,00,111 வீடுகள் மற்றும் 4 லட்சத்து 73 ஆயிரத்து 569 தனிநபர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் இந்தியாவில் சுமார் 16 கோடி பேர் மது அருந்துகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தேசிய அளவில் 14.6 சதவீதம் அதாவது 16 கோடி மக்கள் மது அருந்துகின்றனர். சட்டீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில் அதிக அளவு மது அருந்துவோர் உள்ளனர். மதுவிற்கு அடுத்தபடியாக கஞ்சா மற்றும் அபின் ஆகியவற்றின் பயன்பாடு உள்ளது. மது அருந்துபவர்களில் 38 பேருக்கு ஒருவர் மது பாதிப்பு தொடர்பாக சிகிச்சைக்காக செல்கின்றனர். 180 பேரில் ஒருவர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

கடந்த 12 மாதங்களில் 2.8% பேர் சுமார் 3.1 கோடி பேர் கஞ்சா பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். அதேபோல் தேசிய அளவில் 1.14% மக்கள் போதை மருந்தை பயன்படுத்துகிறார்கள். இதில் 0.96% பேர் ஓபியாட் எனப்படும் போதை மருந்து மாத்திரை வடிவிலும், 0.52 சதவீதம் பேர் ஓபியத்தையும் பயன்படுத்துகின்றனர். 10 வயது முதல் 75 வயது வரையிலான 1.08% பேர் அதாவது 1.18 கோடி பேர் மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவுரை இல்லாத நிலையில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய போதை மருந்தை பயன்படுத்தி உள்ளனர்.  4.6 லட்சம் சிறுவர்கள் மற்றும் 18 லட்சம் மூத்தவர்கள், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், இன்ஹேலர் தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மது விற்றவர் கைது