இந்திய வீரர் ஓங்கி விட்ட ‘பளார்’ ரகசியங்களை கக்கியவன் மசூத் அசார்: மாஜி விசாரணை அதிகாரி தகவல்

புதுடெல்லி:  ‘‘இந்திய வீரர் ஒரு அறை விட்டதிலேயே நடுநடுங்கிப்போய் அனைத்து விவரங்களையும் கூறியவன் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசார்’’ என முன்னாள் விசாரணை  அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காஷ்மீர் புல்வாமா தாக்குதல், உரி ராணுவ முகாம் தாக்குதல், பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல், நாடாளுமன்ற தாக்குதல் என இந்தியாவில் நடந்த பல முக்கியமான தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தானில்  செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு. இதன் தலைவன் மவுலானா மசூத் அசார். இவன் போர்த்துகீசிய பாஸ்போர்ட் மூலம் வங்கதேசத்தின் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து காஷ்மீரில் தங்கியிருந்தான். இவனை கடந்த  1994ம் ஆண்டு தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்தி செல்லப்பட்டபோது, இந்திய பயணிகளை விடுவிக்க, மவுலானா மசூத் அசார், உமர் ஷேக், முஷ்டாக் அகமது ஜர்கர் ஆகிய மூன்று  முக்கிய தீவிரவாதிகளையும் இந்தியா விடுவிக்க வேண்டும் என கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசு வேறு வழியின்றி இவர்களை விடுவித்தது.  மசூத் அசார் இந்திய சிறையில் இருந்தபோது, அவனிடம் பல முறை விசாரணை நடத்திய அதிகாரிகளில் ஒருவர் அவினாஸ் மொகனானே. சிக்கிம் காவல்துறையின் முன்னாள் டிஜிபி. அவர் மசூத் அசார் பற்றி கூறியதாவது: மசூத் அசார், இந்திய சிறையில் இருந்தபோது, அவனிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தான். அப்போது அருகில் இருந்த ராணுவ வீரர், அவன் கண்ணத்தில் பளார் என  ஒரு அறை கொடுத்தார். இதில் அவன் முற்றிலும் நிலை குலைந்து போனான். அதன்பின் அவனது செயல்பாடுகள் குறித்த அனைத்து விவரத்தையும் கூற தொடங்கினான்.

ஜம்மு கோத் பல்வால் சிறையில் நான் அவனிடம் மணிக்கணக்கில் விசாரணை நடத்தியுள்ளேன். எல்லா விவரங்களையும் அவன் கூறிவிட்டதால், வலுக்கட்டாயமான முறை எதையும் நாங்கள் பின்பற்றவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை அவன் பெருமையாக கூறினான். ‘‘என்னை நீங்கள் நீண்டநாள் காவலில் வைத்திருக்க முடியாது. நான் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு மிக முக்கியமான நபர். எனது பிரபலத்தை நீங்கள் குறைவாக  மதிப்பிட்டுள்ளீர்கள். நான் மீண்டும் பாகிஸ்தானில் இருப்பதை, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உறுதி செய்யும்’’ என்று கூறினான். அவன் கூறியபடியே, அவன் கைது செய்யப்பட்ட 10வது மாதத்தில், டெல்லியில் சில வெளிநாட்டினர் கடத்தப்பட்டனர். அவர்களை விடுவிக்க மசூத் அசாரை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த திட்டம்  முறியடிக்கப்பட்டு உமர் ஷேக் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனும் விமான கடத்தலின் போது விடுவிக்கப்பட்டான். கடந்த 1995ம் ஆண்டில் காஷ்மீரில் 5 வெளிநாட்டினர் கடத்தப்பட்டபோதும், மசூத் அசாரை  விடுவிக்க வேண்டும் என ஹர்கத்-உல்-அன்சார், அல்-பரான் என்ற அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இறுதியில் கடந்த 1999ம் ஆண்டில், இந்திய விமான கடத்தலுக்காக மசூத் அசார் விடுவிக்கப்பட்டான். ‘என்னை நீண்ட  காலம் நீங்கள் வைத்திருக்க முடியாது’ என அவன் கூறியது அப்படியே நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: