தங்கம் விலை தொடர்ந்து கிடுகிடு சவரன் ரூ26,000 நெருங்கியது: இன்னும் விலை உயர வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக சவரன் ரூ25,568 தொட்டது. தொடர் விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் விலை உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலையில் கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டது. தொடர்ந்து, ஜனவரி மாத இறுதியில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. பிப்ரவரி மாதமும் தங்கம் விலை உயர்வை சந்தித்தது. கடந்த 13ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ25,128, 14ம் தேதி ரூ25,160, 15ம் தேதி ரூ25,384, 16ம் தேதி ரூ25,520க்கும் விற்கப்பட்டது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். ஒருநாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று மீண்டும் தொடங்கியது. அதில் உயர்வைதான் சந்தித்தது. அதாவது, கிராமுக்கு ரூ6 அதிகரித்து ஒரு கிராம் ரூ3,196க்கும், சவரனுக்கு ரூ48 உயர்ந்து ரூ25,568க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை ரூ25,568 என்பது வரலாற்றில் இதுதான் முதல்முறையாகும். இதற்கு முன்னர் இந்த அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது இல்லை. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாகும்.

விரைவில் சவரன் ரூ26,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 13ம் தேதியில் இருந்து நேற்று வரை சவரனுக்கு ரூ440 அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய ெசய்துள்ளது. நகை வாங்குவோருக்கு இன்னும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நிதி பற்றாக்குறை, தொழிலாளர்கள் போராட்டத்தால் உற்பத்தி பாதிப்பு என வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரிய முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்துள்ளனர். அவர்கள் தங்கம் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால், உலகச்சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் உள்நாட்டு சந்தையில் எதிரொலித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்னும் தங்கம் விலை உயரத்தான் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: