×

பசுமை தீர்ப்பாயத்தின் ஆணை ரத்து ஸ்டெர்லைட் ஆலை திறக்க தடை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்த உச்ச நீதிமன்றம், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர், குடிநீர் மாசு மற்றும் மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறி ஆலையை மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100வது நாளின்போது பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் 13 பேர்  பரிதாபமாக பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்படி கடந்தாண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது. மேலும் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலைைய மூடும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேரடி ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, ஆணையத்தின் உத்தரவை அடுத்து ஆய்வு செய்த குழு அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் 15ம் தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி அடுத்த 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாத்திமா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என முன்னதாக தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல், தமிழக அரசு தரப்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்த தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணக்குமார் ஆகியோர் வாதத்தில், “ஸ்டெர்லைட் ஆலையால்தான் தூத்துக்குடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நிலத்தடி நீர், குடிநீர் ஆகியவை அதிகம் பாதிப்படைந்துள்ளது.

இதில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் விலங்குகளும் அதன் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இதே நிலைமை நீடித்தால் மேற்கண்ட பகுதியில் நிலத்தடி நீர் என்பது கானல் நீர் போல் ஆகிவிடும். தூத்துக்குடி ஒரு காலக்கட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதியாக விளங்கியது. ஆனால் தற்போது அதற்கு எதிர்மறையாக மாறிவிட்டது. தூத்துக்குடி தன் சொந்த சூழலையே தற்போது இழந்து விட்டது என்றே தெளிவாக கூற முடியும். இதற்கான முக்கிய காரணம் ஸ்டெர்லைட் ஆலையினுள் இருந்து வெளியேற்றப்படும் காப்பர் கழிவுகள், குளோரைடு, சல்பைடு ஆகிய அமிலங்கள்தான். அதனால் ஆலையை கண்டிப்பாக மீண்டும் திறக்க நீதிமன்றம் அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.
 இதற்கு வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து மேற்கண்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது என்றும், மேலும் வேறு ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் அனைத்து தரப்பும் பிப்ரவரி 11ம் தேதிக்குள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் எனக்கூறி நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 7ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் ஆகிய இரு தரப்பிலும் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், “தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. அதற்கான உத்தரவையும் வழங்க வாய்ப்பில்லை. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதற்கும் தடை விதிக்க இயலாது. இதைத்தவிர ஆலையை மீண்டும் திறக்க சொல்ல தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு கண்டிப்பாக அதிகாரம் கிடையாது. அதனால் தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது.  அதேபோல் ஆலை விவகாரத்தில் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் பெற்ற அனுமதியும் ஏற்க தகுதியானது கிடையாது. அதனையும் நீதிமன்றம் இந்த உத்தரவின் மூலம் ரத்து செய்கிறது. அதுகுறித்த அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகிறது.

மேலும் ஒருவேளை தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி அவர்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம். மேலும் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு எந்த தடையும் கிடையாது என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து நேற்று உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரிக்கலாம்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அதேபோல மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து ரூ50லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனுதாரர் கதிரேசன் தரப்பில் வழக்கறிஞர் ரீகன் எஸ் பெல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அளித்த உத்தரவில், “வழக்கில் துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்வது மற்றும் ரூ50லட்சம் நிவாரணம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை நீதிமன்றம் நிராகரிக்கிறது. இருப்பினும் வழக்கை தன்னிச்சையாக சிபிஐ விசாரிக்க தடை இல்லை என உத்தரவிட்டனர்.

தமிழுக்கு மரியாதை
ஸ்டெர்லைட் வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நடந்து கொண்டிருந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான ரோகிண்டன் பாலி நாரிமன் ஒரு தகவலை தெரிவித்தார். அதில்,‘‘உலகின் எந்த மொழியை வேண்டுமானாலும் வலது புறத்தில் இருந்து இடது புறமாக நோக்கி எழுதலாம். ஆனால் கண்டிப்பாக தமிழை மட்டும் அதுபோன்று எழுத முடியாது. இதிலிருந்தே அதன் சிறப்பு தெரியவருகிறது’’ என குறிப்பிட்டார்.

வைகோ ஏற்படுத்திய மாற்றம்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் எதிர்மனுதாரராக நீதிமன்றம் இணைத்துக் கொண்டது. இதில் விசாரணையின் போது  நீதிபதிகள் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகளை மட்டுமே முதலில் கேட்டனர். இதனால் வழக்கின் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக தான் வரும் என்று கணிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் வைகோவிற்கு வாதிட நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவரது வாதத்தில், “ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 22 ஆண்டுகளாக தூத்துக்குடி பகுதி சீரழிந்து விட்டது. இதனை எதிர்த்து போராடியவர்கள் 13 பேர் பலியானார்கள். இதற்கு யார் பொறுப்பு?. இப்படியே விட்டால் ஆலை பாதிப்பால் அப்பகுதியே சீரழிந்து விடும். இதனை நான் எனது வாழ்நாள் வேதனையாக கருதுகிறேன் என நீதிபதிகள் முன்னிலையில் வாதிட்டார். இதையடுத்துதான் இரு நாட்களோடு முடிய இருந்த விசாரணை மீண்டும் நீடித்தது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் வைகோ தான் என குறிப்பிட்டு தெரிவிக்கலாம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Green Tribunal ,plant ,Sterlite ,Supreme Court , Green Tribunal, Sterlite Plant, Barrier to Open, Supreme Court
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...