ஐ.டி. நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்படுத்திவிட்டது அதிமுக அரசு... ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஐ.டி. நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கி தமிழகத்துக்கு அதிமுக அரசு தலைகுனிவு ஏற்படுத்திவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் உள்ள காக்னிசன்ட் நிறுவனம் கட்டடம் கட்ட அனுமதி வழங்க ரூ.26 கோடி லஞ்சம் பெற்றதாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறுசேரியில் கட்டட அனுமதி, மின் இணைப்பு அனுமதி, சுற்றுசூழல் அனுமதி வழங்க அதிமுக அரசு லஞ்சம் பெற்றுள்ளது. அதற்காக தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ.26 கோடி லஞ்சம் தந்ததாக அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கால் உலக அரங்கில் தமிழக அரசுக்கு பெரும் அவமானம். மேலும் காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அதிமுக அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சியால் உலக அரங்கில் தமிழர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.  

இதனை அடுத்து காக்னிசன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது வழக்குப்பதிய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து லஞ்சம் தொடர்பான ஆவணங்களை பெற வேண்டும். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  

காக்னிசன்ட் நிறுவனத்திடம் 2012 முதல் 2016-க்குள் லஞ்சம் வாங்கப்பட்டுள்ளது. 2012-ல் இருந்து 2016 வரை அமைச்சர்களாக இருந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார். முன்னாள் வீட்டுவசதி அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தங்கமணி, பி.வி ரமணா, எம்.சி.சம்பத்தும் 2012 முதல் அமைச்சர்களாக இருந்தனர். தோப்பு வெங்கடாசலம், கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED விருதுநகர் அருகே லஞ்சம் பெற்ற விஏஓ கைது