×

நடப்பு நிதியாண்டில் ஜனவரி வரை தங்கம் இறக்குமதி 5% சரிவு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில், தங்கம் இறக்குமதி 5 சதவீதம் சரிந்துள்ளது.தங்கம் இறக்குமதி நிலவரம் குறித்து வர்த்தக அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது:
 நடப்பு 2018-19 நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரையிலான 10 மாதங்களில் 2,693 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2017-18 நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் தங்கம் இறக்குமதி மதிப்பு 2,823 கோடி டாலராக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இறக்குமதி 5 சதவீதம் குறைந்துள்ளது.அதே நேரத்தில், கடந்த நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தங்கம் இறக்குமதி தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. ஆனால், ஜனவரி மாதத்தில் இந்த இறக்குமதி 38.16 சதவீதம் உயர்ந்து 231 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி ஆகியுள்ளது.

அளவு அடிப்படையில் தங்கம் இறக்குமதி 2017-18 நிதியாண்டில் 22.43 சதவீதம் உயர்ந்து 955.16 டன்களாக உள்ளது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் இறக்குமதி 780.14 டன்களாக இருந்தது என அமைச்சரவை புள்ளி விவரம் தெரிவிக்கிறது. நடப்பு நிதியாண்டில் மதிப்பு அடிப்படையிலான புள்ளி விவரத்தையே வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இறக்குமதி மதிப்பு குறைந்ததற்கு, சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தது காரணமாக இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. கொரியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு கெடுபிடி மற்றும் 10 சதவீத சுங்க வரி ஆகியவையும் இதில் அடங்கும். நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி சரிவால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold,imports,down,January
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 475...