×

பீகாரில் பிரதமர் மோடி பேச்சு: உங்களுக்குள் பற்றி எரிகின்ற தீ எனக்குள்ளும் தீவிரமாக உள்ளது.. மெட்ரோ ரயில் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

பாட்னா: பீகாரில் மெட்ரோ ரயில், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் பேசுகையில், ‘‘உங்களுக்குள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீ, என் இதயத்திலும் தீவிரமாக எரிந்து கொண்டிருக்கிறது’’  என்றார்.பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். பீகாரின் பராவ்னி நகரை சென்றடைந்த அவர், பாட்னா நகர எரிவாயு விநியோக திட்டத்தை தொடங்கி வைத்தார். பராவ்னி எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையை நவீனமயமாக்கி, விரிவாக்கம் செய்யும் திட்டம், பாட்னா நகருக்கான புதிய மெட்ரோ ரயில் சேவை திட்டம் உள்ளிட்ட ₹33 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

மின்மயமாக்கப்பட்ட பல்வேறு ரயில் வழித்தடங்களை தொடங்கி வைத்த அவர், முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ராஞ்சி-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சாப்ரா, புர்னியா பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான பீகாரை சேர்ந்த  சிஆர்பிஎப் வீரர்கள் சஞ்சய் குமார் சின்ஹா, ரதன் குமார் தாகூருக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களின் உயிர்த் தியாகத்திற்கு தலை வணங்குகிறேன். இங்கு கூடியிருக்கும் மக்களிடம் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். உங்களுக்குள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீ, என் இதயத்திலும் தீவிரமாக எரிந்து கொண்டிருக்கிறது.  

வளர்ச்சி, செயல்படுத்துதல் என்ற இரு தண்டவாளத்தில் இந்த அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது. உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழில்துறை மேம்பாடு, நவீன வசதிகளை மக்களுக்கு நாங்கள் தந்துள்ளோம். கடந்த 70 ஆண்டாக அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அவர்களுக்கான வாழ்வை எளிதாக்குவோம். இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் பீகாரின் நிலையை மாற்றிக் காட்டும். ஏற்கனவே பாட்னாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. அதோடு பீகாருக்கு கூடுதலாக ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஆலோசனைகளும் நடந்து வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் புறப்பட்ட அவர் ஹசாரிபாக் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். ராம்கர் மாவட்டத்தில் மகளிர் பொறியியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை தொடங்கி வைத்தார். ஹசாரிபாக், தும்கா, பாலமாவ், ஜம்ஷெட்பூரில் 500 படுக்கை வசதி கொண்ட 4 மருத்துவமனை உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Bihar , Prime Minister Modi,speech,Bihar,fire,burns,
× RELATED நாட்டில் 25 கோடி மக்களை வறுமையில்...