×

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் மூன்றாண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு அபராதம்

மதுரை: தமிழத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆவண காப்பக அதிகாரிகள் கூறியுள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், இதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த 2015 ஜூன் 17ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஜூலை 1 முதல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுனர் உரிமம், வாகனத்திற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என தெரிவித்தது.

ஆவண காப்பக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் 2016ம் ஆண்டு போலீசார் சோதனையில், ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 79 ஆயிரத்து 200 பேரிடம் அபராதம் விதிக்கப்பட்டது. 2017ல் 9 லட்சத்து 88 ஆயிரம், 2018ல் 10 லட்சத்து 2 ஆயிரத்து 200 பேரிடம் என 3 ஆண்டுகளில் 29 லட்சத்து  69 ஆயிரத்து 400 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்றார். போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த வருடத்தில் மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஹெல்மெட் சோதனையில் போலீசார் அவ்வப்போது தொய்வு நிலையில் காணப்பட்டனர். இதனால் மீண்டும் போலீசார் இதில் கவனம் செலுத்த வேண்டும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஹெல்மெட் அணியவில்லை எனில் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி வரும் மாதங்களில் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Driving,wearing,motorcycle,helmet,fined,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...