×

மூன்று குழந்தைகளின் முன்னிலையில் பிரான்ஸ் நாட்டு தம்பதிக்கு தமிழ் முறைப்படி திருமணம்: மணக்கோலத்துடன் மதுரையில் நகர்வலம்

மதுரை: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதி, தங்கள் 3 குழந்தைகள் முன்னிலையில் தமிழ் முறைப்படி மதுரையில் நேற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரை சேர்ந்தவர் பிலிப் (50). இவரது மனைவி ஆஸ்ட்ரிச் (40). இவர்கள் 20 வருடங்களுக்கு முன்பு பிரான்சில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பிலிப் ஆயுர்வேத மருந்துகளை அங்கு விற்பனை செய்து வருகிறார். ஆண்டுதோறும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். இந்தாண்டு குடும்பத்துடன் இந்தியா வந்த அவர், நேற்று முன்தினம் காலை மதுரை வந்தார். நேற்று காலை 10.30 மணியளவில், மதுரை மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயிலுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த அவர், தமிழ் முறைப்படி பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தார். அவரது மனைவி ஆஸ்ட்ரிச் பட்டுச் சேலை அணிந்திருந்தார்.

விநாயகர் சன்னதி முன்பு பிலிப், ஆஸ்ட்ரிச் கழுத்தில் தாலி கட்டினார். உடன் வந்திருந்த அவரது குழந்தைகள் மற்றும் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் இருவரையும் வாழ்த்தினர். பிலிப் கூறுகையில், ‘‘முதன் முறையாக நாங்கள் இப்போது தான் இந்தியா வந்துள்ளோம். இந்தியாவுக்கு வரும் போது, தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும் என நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். தமிழ் திருமண கலாசாரம், எங்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் தமிழ் முறைப்படி நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். தமிழகத்தில், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரையில் இந்த திருமணம் நடந்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி’’ என்றார். மணக்கோலத்திலேயே அவர்கள், மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு சென்றனர். அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அவர்களை வியப்புடன் பார்த்தனர். அவர்கள் மதுரையில் திருமணம் செய்து கொண்ட செய்தியறிந்ததும், சுற்றுலாப் பயணிகள், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,French ,bride ,Madurai ,Tamils , presence,children,marriage,French couple,Tamils,Madurai,
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...