×

அரூர் அருகே நள்ளிரவில் துணிகரம்: டாஸ்மாக் ஊழியரை சுட்டு கொள்ளையடித்த 2 பேர் கைது.. பணம், துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

அரூர்: அரூர் அருகே நரிப்பள்ளியில் டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு ₹1.30 லட்சத்தை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம், நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தனிப்பள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அரூர் அடுத்த நரிப்பள்ளியை சேர்ந்த மகரஜோதி (44) என்பவர் விற்பனையாளராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து கடையை அடைத்து விட்டு, வழக்கம்போல மதுவிற்ற பணம் ₹1.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நரிப்பள்ளி எம்ஜிஆர் நகர் அருகே, அவரை பின்தொடர்ந்து டூவீலரில் ஹெல்மெட் அணிந்து ஒருவரும், முகத்தில் துணி கட்டிக்கொண்டு இருவரும் வந்தனர். திடீரென அவர்களில் ஒருவன் கைத்துப்பாக்கியால் மகரஜோதியை நோக்கி  சுட்டான். அதிர்ச்சியடைந்த அவர் கைகளால் தடுக்க முயன்றதில், 2 கைகளிலும் 4 குண்டுகள் பாய்ந்தது.

இருப்பினும் வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியவரை மர்மநபர்கள் விரட்டிச்சென்று வழிமறித்து கம்பியால் பலமாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். பின்னர் அவர் வைத்திருந்த ₹1.30 லட்சத்தை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பினர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மகரஜோதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கொள்ளையர்கள், வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போல இருப்பதாக, மகரஜோதி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து எஸ்பி மகேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி வனப்பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட்டபோது,  பதிவெண் இல்லாமல், டூவீலரில் சென்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்களிடம் ₹1.30 லட்சம் பணம், நாட்டுரக கைத்துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அரூர் பகுதியை சேர்ந்த பரதன், வெங்கடேசன் என்பதும், மகரஜோதியை சுட்டு பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களுடன் கொள்ளையில் ஈடுபட்ட மற்றொருவரை தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே இதேபோல் டாஸ்மாக் ஊழியர்களை தூப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து ஊத்தங்கரை டிஎஸ்பி அர்ஜூணன், அரூர் சென்று விசாரணை நடத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,Arur ,Tasmak , Arrested,night,Arur,Tasmac,money, gun,bullets
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்