மக்கள் நலனுக்காக அல்ல தேர்தல் நலனுக்காக கொண்டுவந்த திட்டம்: செந்தில் ஆறுமுகம், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஒருங்கிணைப்பாளர்

தேர்தல் வரும் நிலையில், ஆளும் கட்சிக்கு மக்கள் நல திட்டங்கள் ஏதும் செய்யவில்லை என்ற ஒருவிதமான பயம், நடுக்கம் உள்ளது. அந்த அடிப்படையில், ₹2,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவகையில் நாங்கள் ஆட்சியை சரியாக செய்யவில்லை என்பதற்கான பாவ மன்னிப்பாக கூட இருக்கலாம். முன்பு வாக்கு வங்கி அரசியல் இருந்தது. இப்போது வங்கி வாக்கு அரசியலாக மாறியிருக்கிறது. ₹2000 வழங்கும் அரசின் அறிவிப்பை எதிர்த்து நாங்கள் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதற்காக வேறு விதமான முறையில் கணக்கெடுப்பு நடத்தினோம், தமிழக அரசு சார்பில் 60 லட்சம் குடும்பங்கள் இருப்பதாக வாதாடினார்கள். ஆண்டு வருமானம், ₹24 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் மட்டுமே, அவர்கள் ஏழைகள். நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் கையெழுத்து, தேதி எதுவும் கிடையாது. பிறகு நீதிபதிகள் கேட்டபோது கையெழுத்து போடப்பட்டது. இது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். தவறான புள்ளி விபரத்தின் அடிப்படையில், 60 லட்சம் குடும்பங்கள் ஏழைகளாக இருக்கின்றனர் என கூறியுள்ளனர்.

எங்களுடைய ஆட்சியில், 100க்கு 30 குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பமாக வைத்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். மாதம் 2 ஆயிரம் கூட சம்பாதிக்க இயலாத நிலையில் குடும்பங்களை வைத்திருக்கிறோம் என அரசே வாக்குமூலம் கொடுக்கிறது. நாங்கள், 10 சதவீதம் பேர் தான் இருக்கிறார்கள் என்று கூறுகிறோம். அது அரசுக்கு பாசிட்டிவான விஷயம், ஆனால், தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று கூறுவதை அரசு பெருமையாக நினைக்கிறது. 40 லட்சம் குடும்பங்கள் கூடுதலாக போட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும், அவர்களுடைய கட்சிக்காரர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களாக இருக்கப்போகிறார்கள். ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டியது என்பது கட்சியின் பணத்தில் இருந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது அரசு பணத்தில் இருந்தே ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நிலை வந்துவிட்டது.

அதிமுக தலைமை கழகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டம் நாம் போட்டிருக்கிறோம். எனவே அனைத்து கிளை செயலாளர்களும், 10க்கு 10 அளவில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கட்சியின் திட்டமாக மாற்றிவிட்டார்கள்.  2,000 ரூபாயில் வறட்சியை எப்படி போக்க முடியும். என்றும் வறட்சி போகக்கூடாது, மக்கள் பிச்சைக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளும் எதிர்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். பணம் இல்லை என்று சொல்லி, பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. சத்துணவு திட்டம், முதியோர் திட்டத்திற்கு நிதி இல்லை. ஏற்கனவே தமிழக அரசு எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், கடன் வாங்கித் தான் செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தையும் கடன் வாங்கித்தான் செயல்படுத்துவார்கள். இதன் மூலம் அதிமுக அரசு தேர்தல் திருவிழாவுக்கு தயாராகிறது. மக்கள் நலனுக்காக அல்ல இது தேர்தல் நலனுக்காக கொண்டுவந்த திட்டம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: