தேர்வு முடிவை நிறுத்தி வைத்து 30 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்கள் வாழ்வில் விளையாடுவதா? அண்ணா பல்கலைக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: அண்ணா பல்கலைகழகம் 30 ஆயிரம் இன்ஜினியரிங் மாணவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைத்து, அவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறது என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்று 2018-19 கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முதலாம் பருவத்தேர்வு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 90 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.350க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான மாணவர்களின் முடிவுகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், 150 கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களின் தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதலாம் ஆண்டில் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இன்னும் நிறைவு செய்யவில்லை என்றும், மாணவர்கள் நலன் சார்ந்த பணிகளுக்காக அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒவ்வொரு மாணவருக்கும் ₹1200 வீதம் செலுத்த வேண்டிய கட்டணத்தையும் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கட்டவில்லை என்றும் கூறியுள்ள பல்கலைக்கழக நிர்வாகம், அதன் காரணமாகவே தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு உண்மையானதாக இருக்கலாம்; ஆனால், அதற்காக மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 150 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும், இனி இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்கவும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: