×

எங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாவிட்டால் எம்.பி. தேர்தலில் அரசுக்கு எதிராக முடிவு: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:  எங்கள் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாவிட்டால் வரும் தேர்தலில் அரசுக்கு எதிராக அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவோம் என்று சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சென்னையில் நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தின்போது தெரிவித்தனர். சத்துணவு, அங்கன்வாடிகளில் 35 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்ற பிறகு பெறக்கூடிய ஓய்வூதிய தொகையை உச்ச நீதிமன்றம்  தீர்ப்புப்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹7,500 வழங்கிட வேண்டும். அந்த தொகையை அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. உண்ணாவிரதத்துக்கு  கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் பெரியசாமி, கண்ணன், ராஜேந்திரன், முருகேஸ்வரி, செல்வி, எத்திராஜன், சிவசங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இணை ஒருங்கிணைப்பாளர் வீரமுத்து வரவேற்றார்.  உண்ணா விரதத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.போராட்டத்தின்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் அளித்த பேட்டியில், “ எங்களது கோரிக்கைகளை ஆளும் அரசு அலட்சியப்படுத்தினால், நாங்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என கூறமாட்டோம். முற்றுகை போராட்டம் என முழக்கமிட மாட்டோம். நீதிமன்றம் செல்ல மாட்டோம். அழைத்து பேசக் கூறி அறைகூவல் விடுக்க மாட்டோம். சத்துணவு உண்ணும் குழந்தைகளை பட்டினி போட்டு பணிக்கு செல்லாமல் போராட்டம் நடத்த மாட்டோம். உண்ணாவிரதப் போராட்டம் முடிந்து ஊர் திரும்பும்போது,  மவுன புரட்சியை மேற்கொள்வோம். பாராமுகமாகவே இருந்தால், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர், ஆளுங்கட்சிக்கு மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் திரும்பி பார்க்கும் வகையில், எங்களது கூட்டமைப்பு முடிவுகளை வெளியிடும்” என்றார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு ஓய்வு பெற்றோர் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் கங்காதரன் முடித்து வைத்தார். இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.பாண்டியன் நன்றி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,election ,meeting ,Anganwadi Workers , notice,demands,Decision,Government,election,Resolution,Anganwadi Workers,meeting
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...