×

இந்தியா முழுவதும் இருந்து பிஎட் பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 82 பேர் விண்ணப்பம்: தமிழர்களின் வாய்ப்பு பறிபோகும் ஆபத்து

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பதவிக்கு, மகாராஷ்டிரா, ஆந்திரா, கொல்கத்தா, பெங்களூரு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 82 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின்(பிஎட் பல்கலை) தற்போதைய துணைவேந்தர் தங்கசாமி கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் அவரின் பதவிக்காலம்  7ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் என்பவவர் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அரசுப் பிரதிநிதியாக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்குமார் கன்னா, ஆட்சி மன்றக்குழுவின் பிரதிநிதியாக பாலகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேடுதல் குழுவினர், அடுத்த துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த மாதம் 11ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்க கெடுவிதிக்கப்பட்டது. இதன்பேரில் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் துணைவேந்தர் விஸ்வநாதன், தேவசகாயம்செல்வகுமார், எஸ்.நிர்மலாதேவி, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த சரிதாதேஷ்பந்த் மற்றும் ஆந்திரா, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் 82 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் உள்ளவர்களின் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பல்கலைகழகங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் துணைவேந்தர்களாக இருப்பார்கள். இதனால் தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு மற்றும் கல்வி முறை முற்றிலும் மாறிவிடும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamils ,India ,applicants ,Vice-Chancellor's , B.Ed University,India,applicants,Vice-Chancellor,position,Tamils,lose,chance
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!