புளியந்தோப்பு பகுதியில் 755 கண்காணிப்பு கேமரா: கமிஷனர் இயக்கி வைத்தார்

பெரம்பூர்: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் புளியந்தோப்பு போக்குவரத்து காவல் துறை சார்பில் வியாசர்பாடி, பெரம்பூர், செம்பியம், கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் 17 கி.மீ. தூரத்திற்கு 755 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் நஜ்மல் ஓடா, போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஜார்ஜ், புளியந்தோப்பு போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சுந்தர்ராஜ் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சீனிவாசன், சுகுமார், சந்திரசேகர், கார்த்திக் உள்பட போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பலர் கலந்து கொண்டனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், ‘‘இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும். இதை அமைப்பதற்கு உதவியவர்களுக்கு பாராட்டுக்கள்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: